பதிவு செய்த நாள்
23
டிச
2014
12:12
சேத்தியாத்தோப்பு: அனுமன் ஜெயந்தியையொட்டி வீரமுடையாநத்தம் வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம் கிராமத்தில் உள்ள வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் மூல நட்சத்திரம் கூடிய அமாவாசை தினமான அனுமன் ஜெயந்தி தினத்தையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி அன்று மாலை 4:00 மணிக்கு துவங்கி இரவு 7:30 மணிவரை வைஷ்ணவப் பெரியவர் பேராசிரியர் ரங்காச்சாரியார் தலைமையில் ஸ்ரீராம காயத்திரி ஹோமமும், தொடர்ந்து அனுமன் மூல மந்திர ஹோமமும் நடந்தது. இதனைத் தொடர்ந்து நல்லெண்ணெய், மஞ்சள், திரவியப்பொடி, நெல்லி முள்ளிப்பொடி, சந்தனாதித் தைலம், சாம்பிராணி தைலம், வெட்டிவேர், விலாமிச்சி வேர், நீர், துளசிப்பொடி, பழவகைகள், தேன், பஞ்சாமிர்தம், குங்குமம், சந்தனம், சொர்ணம், நெய், பால், தயிர், திரிசூரணம், இளநீர், கலசநீர், உட்பட 27 வகையான அபிஷேகம் நடந்தது. உடன் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து 1008 போற்றி அர்ச்சனையும், நாமாவளி அர்ச்சனையும் உடன் மகா தீபாராதனையும் நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி நடத்தினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாத வினியோகமும் அன்னதானமும் நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.