பதிவு செய்த நாள்
13
ஜூன்
2011
12:06
தக்கலை : குமாரகோவில் முருகன் கோயிலில் தேரோட்டம் நடந்தது. இன்று(13ம் தேதி) ஆறாட்டு நடக்கிறது. குமாரகோவில் வேளிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ஒரு தேரிலும், விநாயகர் இன்னொரு தேரிலும், அமர்ந்து வீதி உலா வந்தனர். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷ முழக்கத்தோடு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் திருவிழாக்குழு தலைவர் குமரி ரமேஷ், செயலாளர் சுனில் குமார், பொருளாளர் செந்தில், பா.ஜ., இளைஞரணி துணை தலைவர் விஜயகுமார், வேல்முருகன் சேவா சங்க தலைவர் டாக்டர் சுகுமாரன், கோயில் கண்காணிப்பாளர் நிர்மல் குமார், மேலாளர் சிவகுமார் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை திருவிளக்கு பூஜை, பஜனை, சமயமாநாடு நடந்தது. சமயமாநாட்டிற்கு விழாக்குழு தலைவர் குமரி ரமேஷ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆண்டிப்பிள்ளை முன்னிலை வகித்தார். செயலாளர் சுனில்குமார் வரவேற்றார். இந்து கல்லூரி பேராசிரியர் அய்யப்பன், பள்ளி ஆசிரியர் ரமேஷ் பேசினார். தொழிலதிபர் அழகிமணி, முன்னாள் திருவிழாக்குழு தலைவர் தங்கப்பன், பேட்ரன் பிரசாத் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு இலவச நோட்புக் வழங்கினர். பொருளாளர் செந்தில் நன்றி கூறினார். இரவு கதாபிரசங்கம் நடந்தது. இன்று காலை 9 மணிக்கு கோயில் தெப்ப குளத்தில் சுவாமிகளுக்கு ஆறாட்டு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் விழாக்குழு இணைந்து செய்துள்ளது.