பதிவு செய்த நாள்
13
ஜூன்
2011
12:06
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. அமைச்சர் பச்சைமால் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்று. இத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9 மணிக்கு லலிதா சகஸ்ரநாமம் பாராயணமும் தொடர்ந்து கொடிப்பட்டம் பல்லக்கில் வைத்து நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து கோயில் வந்தடைந்தது. பின்னர் கொடிமரத்தில் தந்திரி பூஜை தொடங்கியதும் கொடிப்பட்டம் 11 முறை கோயில் உட்பிரகாரம் வலம் வந்து கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அன்னதானம், சமயஉரை, இரவு தேவார இன்னிசை, மேஜிக்÷ஷா, தேவி பூப்பந்தல் வாகனத்தில் திருவீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும், காலை சிறப்பு அபிஷேகம், மதியம் சிறப்பு அன்னதானம், மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஒன்பதாம் நாள் திருவிழாவான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். அலங்கார தோரணங்கள், மலர்களால் அல்கரிக்கப்பட்ட தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி வந்தது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் வலம் வரும்போது உயரமான கட்டடங்களில் இருந்து பக்தர்கள் தேருக்கு மலர் தூவி வழிபட்டனர். நிகழ்ச்சியில் நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் திருக்கோயில் தொகுதி கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன், கன்னியாகுமரி கோயில் மேலாளர் சோணாச்சலம், கன்னியாகுமரி டவுன் பஞ்., தலைவர் கோல்டா எழுலன், துணை தலைவர் வின்ஸ்டன், வெள்ளாளர் சமுதாய தலைவர் பிச்சுமணி, அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சதாசிவம், மாணவரணி செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் மணி, தம்பிதங்கம், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 10ம் நாள் விழாவான இன்று (13ம் தேதி) காலை 9 மணிக்கு மேல் அம்மன் ஆறாட்டுக்கு எழுந்தருளல், மாலை 5 மணிக்கு மண்டகப்படி, 6 மணிக்கு சமய உரை, இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை, 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் தேவி திருவீதி உலா வருதல், 9.30 மணிக்கு அம்மன் தெப்பத்திற்கு எழுந்தருளல், 10.30 மணிக்கு ஆறாட்டு அதைத்தொடர்ந்து வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தெப்பத்திருவிழா: 10ம் நாள் விழாவான இன்று தெப்பத்திருவிழா நடக்கிறது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் கடந்த 25 ஆண்டுகளாக கோயில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடத்த முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் சிவசேனா தொண்டர்களின் முயற்சியால் தெப்பக்ளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் சீரமைக்கப்பட்டது. அமைச்சர் பச்சைமால் மேற்கொண்ட நடவடிக்கையால் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து 25 ஆண்டுகளுக்கு பின் இன்று தெப்பக்குளத்தில் தெப்பதிருவிழா நடக்கிறது.