சபரிமலை: தங்க அங்கி வருகையை ஒட்டி இன்று பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஏடிஜிபி பத்மகுமார் கூறினார். மண்டலபூஜையை ஒட்டி பம்பை மற்றும் சன்னிதானத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:தங்க அங்கி வருகையை ஒட்டி பம்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணி முதல் பக்தர்கள் பம்பையிலிருந்து சன்னிதானம் செல்வது தடை செய்யப்படும். அங்கி பம்பையில் இருந்து சன்னிதானம் புறப்பட்டு சென்று மரக்கூட்டம் வந்த பின்னர்தான் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மரக்கூட்டத்தில் அங்கி வந்த விபரம் பம்பைக்கு ஒயர்லெஸ்சில் தெரிவிக்கப்படும்.இன்று பகல் ஒரு மணி வரை பக்தர்கள் 18-ம் படியேற முடியும். அதன் பின்னர் மாலையில் அங்கி சன்னிதானம் வந்து தீபாராதனை முடிந்த பின்னர்தான் பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் அதை சமாளிப்பது பற்றி போலீசாருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.