பதிவு செய்த நாள்
02
ஜன
2015
01:01
அன்னுார் : அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
மேற்றலை தஞ்சாவூர் என்றழைக்கப்படும் அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டு பழமையானது. இக்கோவிலில் கடந்த 25ம் தேதி தேர்த்திருவிழா துவங்கியது. தினமும் மாலையில் சுவாமி திருவீதியுலா நடந்தது.நேற்று காலை 7.30 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளினார். காலை 11.00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. பேரூர், இளைய பட்டம் மருதாசல அடிகள், வாகீசர் மடம் காமாட்சிதாச ஏகாம்பர நாத சாமிகள், காரமடை, அருணை அருள்முருக அடிகள், எம்.எல்.ஏ., கருப்பசாமி ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு, ஓதிமலை ரோடு வழியாக மாலை 5.10 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட சிறிய விநாயகர் தேர் சென்றது. செண்டை மேளம், பஜனை குழு, திடும் இசை, வாண வேடிக்கையுடன் தேரோட்டம் நடந்தது. அலங்கார குதிரையின் நடனமும், யானையின் அணிவகுப்பும் நடந்தது. வழியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர் மோர், பொங்கல், மற்றும் உணவு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.