பதிவு செய்த நாள்
02
ஜன
2015
01:01
ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், சிறப்பு வழிபாடு மற்றும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருவள்ளூர்: வீரராகவ பெருமாள் கோவிலில், நேற்று, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக உற்சவர் வீரராகவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சத்தியமூர்த்தி தெருவில் உள்ள, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, புஷ்ப அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
பூங்கா நகர்: சிவா - விஷ்ணு கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு, அதிகாலை 4:00 மணிக்கு நடந்தது. ஜலநாராயண பெருமாள் சன்னிதியில் மகா தீபாராதனை நடைபெற்றது. பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், லட்சுமி குபேர யாகம் நடந்தது. தீர்த்தீஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நடந்தது. வீரராகவர் கோவில், புட்லுார் அங்காள பரமேஸ்வரி, பூங்கா நகர் யோக ஞான தட்சிணாமூர்த்தி மற்றும் ஞான மங்கள சனீஸ்வர பகவான், பெரியகுப்பம் அருணாசலேஸ்வரர் கோவில், மணவாள நகர் மங்களீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. லட்சுமிபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், சந்தனக் காப்பு அலங்காரம் நடந்தது.
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று அதிகாலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம் நடந்தது; மூலவருக்கு தங்க கீரிடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
இரவு, தங்கத் தேரில், முருக பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வந்தார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். ம.பொ.சி., சாலை சுந்தர விநாயகர் கோவில், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், படவேட்டம்மன் கோவில், மத்துார் மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவில், நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தன.
ஊத்துக்கோட்டை: அண்ணாதுரை சிலை அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில், கிராம தேவதை செல்லியம்மன் கோவில், நேரு பஜாரில் உள்ள சர்ப விநாயகர், நாகவல்லி அம்மன் கோவில், ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவில், தொம்பரம்பேடு மகா கால பைரவர் கோவில், தாராட்சி பரதீஸ்வரர் கோவில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில், பென்னலுார்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சுற்றியுள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.
பள்ளிப்பட்டு: ஊத்துக்கோட்டை பிராமணர் தெருவில் உள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆரணி ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில், பெருமுடிவாக்கம் கோதண்டராம சுவாமி கோவில் மற்றும் சுற்றியுள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. விஜயராகவபுரம் கொற்றலை ஆற்றங்கரையில், 500 ஆண்டுகள் பழமையான, விஜயராகவ பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சுப்ரபாத தரிசனம், தொடர்ந்து கோ பூஜை நடந்தது. பின், சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, சந்தனக் காப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார். கும்மிடிப்பூண்டி எஸ்.பி.முனுசாமி நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவில், ஸ்ரீவாரி பாபா நகரில் உள்ள லட்சுமி கணபதி, தட்சிணாமூர்த்தி கோவிலில், வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பொன்னேரி: பொன்னேரி, ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் ஆலயம், தடப்பெரும்பாக்கம் லட்சுமியம்மன் ஆலயம், திருப்பாலைவனம் பாலீஸ்வரர், பழவேற்காடு சிந்தாமணி ஈஸ்வரர் ஆகிய திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நள்ளிரவு முதல் நடந்த, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகளில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிராத்தனைகள் நடந்தன. ஏகாதேசியை முன்னிட்டு, கரிகிருஷ்ண பெருமாள் கோவில், மீஞ்சூர், வரதராஜ பெருமாள் கோவில், தேவதானம் ரங்கநாதர் பெருமாள் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன.