பதிவு செய்த நாள்
02
ஜன
2015
02:01
வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், சிறப்பு வழிபாடு மற்றும் உற்சவம் நடந்தது.
சிறப்பு பூஜை: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்கு மிகவும் சிறப்பு பெற்றது. நேற்று, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதிகாலை, 4:30 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சிஅளித்தார்.
அதேபோல், அஷ்டபுஜ பெருமாள் கோவில், அழகிய சிங்க பெருமாள் கோவில், விளக்கொளிப் பெருமாள் கோவில், யதோக்தகாரி பெருமாள் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், பாண்டவபெருமாள் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. ஒவ்வொரு பெருமாள் கோவிலிலும், அதிகாலை 3:00 மணி முதலே பக்தர்கள் கூட்டம் குவிய துவங்கியது. கோவில்களில், நீண்ட நேரம் வரிசையில் நின்று, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாமல்லபுரம்: ஸ்தலசயன பெருமாள் கோவிலில், உற்சவர், ராஜ அலங்காரத்தில், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன், மகா மண்டபத்தில் எழுந்தருளி, அதிகாலை 5:05 மணிக்கு, சொர்க்க வாசலை கடக்க, பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என முழங்கி, சுவாமியை தரிசித்தனர்.
பக்தர்களுக்கு தரிசனம்: சிங்கபெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மப்பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, மூலவர் பாடலத்ரி நரசிம்மபெருமாள் சுவாமிக்கு, பூ அங்கி சேவையும், சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. திருமுக்கூடலில், அப்பன் வெங்கடேசப் பெருமாள் கோவிலில் 95ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவ திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு திருமஞ்சனமும், காலை 6:00 மணி முதல், 8:00 மணி வரை சொர்க்க வாசற்படி தரிசனமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, காலை 8:00 மணி முதல், 10:00 மணி வரை கோபுர வாயிலில், மலரால் அலங்கரிக்கப்பட்ட அப்பன் வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.