பதிவு செய்த நாள்
02
ஜன
2015
02:01
புதுச்சேரி: காளத்தீஸ்வரர், வன்னிய பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மிஷன் வீதியில், காளத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள, வரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று காலை 5.00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக வரதராஜப் பெருமாள், கருட வாகனத்தில் பிரகார புறப்பாடு நடந்தது.
வன்னிய பெருமாள்: முதலியார்பேட்டையில் அமைந்துள்ள, வன்னிய பெருமாள் கோவிலில், காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக, பெருமாள் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிந்தா... கோபாலா... கோஷத்துடன் மக்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி சீனுவாசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள், முத்தியால்பேட்டை தென்கலை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில்களில் திருப்பணி நடப்பதால், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இருந்தபோதும், பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.
பாகூர்: பாகூரில் பழமை வாய்ந்த, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று காலை 5.00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 5.30 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு திருமஞ்சனம், நேற்று அதிகாலை 5.00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக் கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று(2ம் தேதி) துவாதசி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு மற்றும் திருப்பணிகள் கமிட்டியினர் செய்துள்ளனர்.
கூடப்பாக்கம்: கூடப்பாக்கம் தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில், திருபுவனை அரங்கநாதர் கோவிலிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.