பதிவு செய்த நாள்
02
ஜன
2015
04:01
திண்டுக்கல் : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாசப்பெருமாள் கோயிலில் நேற்று காலை 5:45 மணிக்கு பரமபத திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆழ்வார்கள் வீதியில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* திண்டுக்கல் எம். வி. எம்., நகர் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது.
பழநி: லட்சுமிநாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நமோ, நாராயண, கோவிந்தா கோஷங்கள் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. லட்சுமி நாரயணப்பெருமாள் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலிலும் வரதராஜ பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவியுடன் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கண்ணாடிபெருமாள்கோயில், வேணுகோபாலசுவாமி கோயில்களில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.
தாடிக்கொம்பு: சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் "பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சவுந்திரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், திருமஞ்சனம் செய்யப்பட்டு அதிகாலை சன்னதியில் இருந்து புறப்பாடு நடந்தது. சவுந்திரவல்லி தாயார் சன்னதி வழியாக பிரகாரத்தில் வலம் வந்து பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஆழ்வார்களுக்கு காட்சியளித்த சுவாமிக்கு மஹா தீப ஆராதனை நடந்தது. தொடர்ந்து 16 கால் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். புத்தாண்டை முன்னிட்டு பக்தர்களுக்கு நாணயங்கள் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி வீதி உலா புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சன்னதி சென்றடைந்தார்.
ரெங்கநாதபுரம்: சீனிவாசப்பெருமாள் மலைக்கோயிலில் "பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சம்பாவனை வழங்கப்பட்டது. பரம்பரை அறங்காவலர் குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக பஜனை மடத்தில் இருந்து ராமர் சுவாமி புறப்பட்டு சன்னதிக்குள் எழுந்தருளினார். சன்னதியில் இருந்து புறப்பட்ட ஆழ்வார் சொர்க்க வாசல் வழியே கோயிலுக்குள் வந்தார். காத்திருந்த பக்தர்கள் கோஷத்துடன் வணங்கினர். இதனை தொடர்ந்து கருட வாகனத்தில் பெருமாள் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 7 மணிக்கு சொர்க்க வாசல் வழியே புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியே நகரை வலம் வந்தார்.
* எரியோடு வரதராஜ பெருமாள் கோயிலில் அலங்கார திருமஞ்சனத்தை தொடர்ந்து சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. எ.பண்ணைப்பட்டி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
* மண்டபம்புதூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தி இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.
தாண்டிக்குடி: ராமர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. அதிகாலையில் நடந்த விழாவில் ராம பிரானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. கருட வாகனத்தில் சுவாமி நகர் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது.
ரெட்டியார்சத்திரம்: கொத்தபுள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. செங்கமலவள்ளி சமேத பெருமாளுக்கு சோடஷ அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவருக்கு விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. ஏகாந்தசேவை அலங்காரத்தில், சொர்க்கவாசல் வழியே பவனி வந்தார்.
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் தேவார, திருவாசக பாராயணம், அன்னதானம் நடந்தது.
*கன்னிவாடி நரசிங்கப்பெருமாள் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
*நிலக்கோட்டையில் உள்ள அகோபில நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.