பதிவு செய்த நாள்
02
ஜன
2015
04:01
தேனி : தேனி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
அல்லிநகரம்: வரதராஜபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4.15 மணிக்கு நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரதராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்தார்.
தேனி என்.ஆர்.டி., நகரில் உள்ள கணேச கந்தபெருமாள் கோயிலில் காலை 4.15 மணிக்கு நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாசபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
போடி: சீனிவாசபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஸ்ரீ தேவி, பூமி தேவியுடன் சீனிவாசப் பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அருளாசி பெற்றனர். ஏற்பாடுகளை தக்கார் ரம்யா சுபாஷினியும், சிறப்பு அலங்காரங்களை அர்ச்சகர் சீனிவாச வரத பட்டாச்சியரும் செய்திருந்தனர்.
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. கதலி நரசிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சொர்க்கவாசல் வழியாக வந்து நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் பிரகாரம் வழியாக சுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை, ஆங்கிலப்புத்தாண்டு என மூன்றும் ஒரே தினத்தில் அமைந்ததால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து பெருமாளை வழிபாடு செய்தனர். அன்னதானம் நடந்தது.
பெரியகுளம்: வரதராஜப்பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதம், திருப்பாவை சேவித்தல், காலை 5 மணிக்கு வைகுண்ட சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என நாமம் ஒலிக்க சொர்க்கவாசல் வழியே வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காலை 6 மணிக்கு மூலவர் வரதராஜப்பெருமாள், தாயார் புஷ்பஅலங்காரம், தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு உற்சவர் வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர்கள் மற்றும் செயல்அலுவலர் ராஜா செய்திருந்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாமத்வாரில் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, கிருஷ்ணர் பல்லக்கில் புறப்பாடு, திருமஞ்சனம், ராமநாமத்திற்கு சிறப்பு பூஜை, மாலை 3 மணிக்கு மகாமந்திர கூட்டுப்பிராத்தனை நடந்தது கிருஷ்ணசைதன்யதாஸ் சொற்பொழிவு நிகழ்த்தினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.