விருதுநகர் : விருதுநகர் மாவட்ட பெருமாள் கோயில்களில் நேற்று வைகுண்ட ஏகாதசி கோலாகலமாக நடந்தது.இதையொட்டி சொர்க்க வாசல் திறக்க ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்
விருதுநகர் ராமர் கோயில் வளாகத்தில் உள்ள பத்மாவதி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று கோலாலகமாக நடந்தது. அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைக்குப்பின் 5 மணிக்கு சொர்க்கவாசல்(பரமபத வாசல்) திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பின்னர் ஸ்ரீராமர் கருட வாகனத்திலும், ஸ்ரீனிவாச பெருமாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாலையில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை கம்மவடுகன் கல்வி கலாசார பொது அறக்கட்டளையினர் செய்தனர்.
விருதுநகர் இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட ரெங்கநாதர் சுவாமி கோயிலில் அதிகாலை 5.05 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. வைகுண்ட ஏகாதசி, ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பு ஒரே நாளில் வந்ததால் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பின்னர் ரெங்கநாதர் கருடாழ்வார் மீது எழுந்தருளி வலம் வந்து காய்கனி வர்த்தக சங்கத்தாரின் ஏகாதசி மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு பக்திப் பாடல்கள், பட்டி மன்றம், இசைத்தட்டு சங்கீதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
சாத்தூர்:சாத்தூர் வெங்கடாசலபதி கோயிலில் நேற்று காலை7.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சாத்தூர் சுற்றுக்கிராம பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து பெருமாளுக்கு சயன சேவை , கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தக்கார் முருகன், நிர்வாக அலுவலர் (பொறுப்பு) ராமராஜா செய்திருந்தனர்.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் சுவாமி , ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு கும்பம் வைத்து யாகபூஜைகளுடன் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. பூஜையின் முடிவில் பூஜிக்கப்பட்ட கும்பநீரால் மூவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி வெண்பட்டு உடுத்தி சப்பரவாகனத்தில் எழுந்தருளினார். அவரை தொடர்ந்து தாயார்கள் இருவரும் சப்பரத்தில் எழுந்தருளினர்.
பின்னர் கோயிலின் சொர்க்கவாசல் கதவுகள் திறக்கப்பட்டு அதன் வழியே சப்பரம் வெளியேறியது. எதிரே நின்ற பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பூக்களை தூவி , கைதட்டி ஆரவாரம் செய்து வழிபட்டனர். பின்னர் சுவாமி வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் கோயிலை அடைந்த சுவாமியை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்று கோயிலின் மையமண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராமநாம வழிபாடு துவங்கியது. ஏற்பாடுகளை கோயில் சேவாசமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், நிர்வாகிகள் செய்தனர்.