பதிவு செய்த நாள்
03
ஜன
2015
12:01
திருப்பூர் : சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, 4 டன் காய்கறி,6 டன் அரிசி உள்ளிட்டவை, திருப்பூரில் இருந்து நேற்று அனுப்பப்பட்டன. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, பக்தர்கள் இணைந்து, தேவசம் போர்டு அனுமதியுடன், "சாது ஜன சகாய சங்கம் உருவாக்கினர். கடந்த 3 ஆண்டுகளாக, இச்சங்கத்தின் கேரள பக்தர்கள் சார்பில், நிலாக்கல் பகுதியில் அன்னதானம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் முதல்முறையாக, நடப்பாண்டு, திருப்பூரில் சாது ஜன சகாய சங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக ராமசங்கரலிங்கம், துணை தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் ரவிச்சந்திரன், இணை செயலாளர் ரவிச்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிலாக்கல் பகுதியில், வரும் 16 வரை, அன்னதானம் வழங்கப்படும். அதற்காக, காய்கறி, அரிசி, மளிகை பொருட்கள் சேகரிக்கப்பட்டு, நேற்று அனுப்பி வைக் கப்பட்டன. தக்காளி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், உருளை கிழங்கு என 7 வகை காய்கறிகள் 4 டன்; அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் 6 டன் லாரியில் கொண்டு செல்லப்பட்டன. திருப்பூர் காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில் இருந்து புறப்பட்ட லாரியை, ரோட்டரி பூபதி நண்பர்கள் அமைப்பு தலைவர் பத்மநாபன், வடக்கு ரோட்டரி தலைவர் ரத்தினசாமி, ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன் மற்றும் ஐயப்பன் கோவில் நிர்வாகிகள், கொடியசைத்து வழியனுப்பினர். இவை, 360 கி.மீ., தூரத்தில் உள்ள நிலாக்கல் பகுதியை, இன்று மதியம் சென்றடையும். சாது ஜன சகாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், "50 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க தேவையான உணவு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப, தொடர்ந்து காய்கறி உள்ளிட்டவை அனுப்பப்படும், என்றனர்.