பதிவு செய்த நாள்
05
ஜன
2015
12:01
ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, சிவன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது.
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், அருங்குளம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், நேற்று, ஆருத்ரா அபிஷேகம் மற்றும் சிறப்பு தரிசனம் நடந்தது. காலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை அமைத்து, கணபதி ஹோமம், காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
இரவு 7:00 மணிக்கு, உற்சவ பெருமான் சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா வந்து அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு, ஆருத்ரா அபிஷேகம் நடந்தது. இதில், அருங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
நகரி: நகரி டவுனில் அமைந்துள்ள, காமாட்சி சமேத கரகண்டேஸ்வர சுவாமி கோவிலில், நடராஜ பெருமான் சன்னிதியில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று இரவு 8:00 மணி முதல், நள்ளிரவு 11:45 மணி வரை, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சிவகாம சுந்தரி சமேத நடராஜ சுவாமிக்கு, வாசனை திரவியங்கள், 30 வகையான பழங்களால் அபிஷேகம், அர்ச்சனை நடத்தப்பட்டது. இன்று, காலை 7:00 மணி முதல், கோவில் பிரகாரத்தில் நடராஜ சுவாமி, தாயார் சிவகாம சுந்தரி உடன் மாணிக்க வாசகர் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நேற்று இரவு நடந்த அபிஷேக விழாவில், நகரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புத்துார்: புத்துார் டவுனில் அமைந்துள்ள, சதாசிவலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி, நடராஜ சுவாமி, மூலவர் சன்னிதியில் சிறப்பு அபிஷேகம் நேற்று நடந்தது. இரவு, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல், நாராயணவனம் அடுத்த, கீளகரம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலிலும், ருத்ராவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது.