பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
11:06
கரடுமுரடான அந்த மலை மீது மூச்சிறைக்க ஏறி, சற்று எட்டிப் பார்த்தால், மதுரையை ஆண்ட பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் செய்வித்த, அரைகுறையாய் நின்றுபோன ஆச்சரியம் தரும் அந்த கோயில், நம்மை காற்றுவீசி வரவேற்கிறது. பெரிய மலைப்பாறையை "ப வடிவில் 7.50 மீட்டருக்கு சதுரமாக வெட்டி, அதன் நடுப்பகுதியை, ஒரே கல்லில், அழகிய சிற்பங்களுடன் கூடிய கோயிலாக 8ம் நூற்றாண்டில் உருவாக்கி இருக்கிறார். அந்த கோயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை என்ற ஊருக்கு அடையாளமாக இருக்கும் அந்த மலையில் வெட்டுவான் கோயில் என்றழைக்கப்படும் அதை தரி(ர)சிக்கலாம். மலையின் மற்றொரு பகுதியில் சமண சமய சித்தாந்தம் போதித்த பல்கலைக்கு அடையாளமாக பாறைகளில் செதுக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் சிற்பங்களே சாட்சி. இந்த இரு அற்புதங்களின் பிண்ணனி குறித்து, மதுரை தொல்லியல் அறிஞர் வேதாசலம், வரலாற்று பேராசிரியர் வெங்கட்ராமன் கூறியதாவது: மதுரையை தலைநகராக கொண்ட பராந்தக நெடுஞ்சடையனுக்கு, சேர மன்னன் தலைவலி கொடுத்தான். இதற்காக கழுகுமலையில் திருமலை வீரர், பராந்தக வீரர் என இருபடைகளை வைத்திருந்தான். இம்மலையின் பழைய பெயர் திருமலை. ஊரின் பெயர் திருநெற்சுறம். இங்கு அரண்மனையும் இருந்துள்ளது. சேரனுக்கு ஆயக்குடி மன்னன் துணையாக இருந்தான். அவனை கழுகுமலையைச் சேர்ந்த மங்கல ஏனாதி எனும் படைத்தளபதி தலைமையில் இரு வீரர்கள் போரிட்டு அழித்தனர். இதற்காக அவர்களுக்கு நிலம் அளித்ததை குசக்குடி தெரு கல்வெட்டு தெரிவிக்கிறது.
வெட்டுவான் கோயிலின் டூம், தாமரையில் இருந்து பூக்கள் தொங்குவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அர்த்தமண்டபம், கருவறை மண்டபமும் உருவாக்கப்பட்டுள்ளது. சிவன் கோயில் என்பதற்கு அடையாளமாக கோபுரத்தின் நான்குபுறமும் நந்தி சிலை உள்ளது. ஆகமவிதிப்படி அமைக்கப்பட்ட மிருதங்க தட்சிணாமூர்த்தி இங்கு மட்டுமே உள்ளார். தெற்கே இவரும், வடக்கே பிரம்மாவும், மேற்கே நரசிம்மரும், கிழக்கே சிவன், பார்வதியும் கொண்ட கோயிலாக இதை உருவாக்கியுள்ளனர். கலை சொல்லும் சிற்பங்கள்: கோபுரத்தில் உள்ள பூதங்கள் ஒவ்வொரு முகப்பாவனையுடன், இசைக்கருவிகளை இசைக்கின்றன. குளித்துவிட்டு ஈரத்துணியுடன் வரும் பெண்ணின் சிற்பம் உட்பட சின்ன சின்ன சிற்பங்கள்கூட தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். கடுமையான கருங்கல் பாறையில் உருவாக்கப்பட்ட இக்கோயில் அரைகுறையாக நிறுத்தப்பட்டிருப்பதற்கு பல யூகங்கள் கூறப்படுகின்றன. பாதி வேலை முடிந்த நிலையில், பாறையில் வெடிப்பு ஏற்பட்டதால் நிறுத்தியிருக்கலாம் அல்லது போரில் மன்னன் இறந்தபிறகு அப்படியே விடப்பட்டிருக்கலாம்.
சமணர் பள்ளி: நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர் சிற்பங்கள், 90க்கும் மேற்பட்ட வட்டெழுத்துகள் என மலையே ஒரு அழகிய சிற்பக்கலைக்கூடமாக காட்சித்தருகிறது. சமண சமயத்திற்கு வழிகாட்டியாக இருந்த 24 தீர்த்தங்கரர்(ஆசிரியர்) சிலைகளை, இறந்தவர்களின் நினைவாக, வசதி படைத்தவர்கள் ஆள் வைத்து செதுக்கியுள்ளனர். இங்கு 15க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் இருந்திருக்கின்றனர். உயிர்பலி கூடாது என்று கொள்கையுடன் சமணர்கள் வாழ்ந்த இம்மலையில், நேர்த்திக்கடன் என்ற பெயரில் ஆடு, கோழி பலி கொடுத்துவருவது ஜீரணிக்க முடியாது, என்றனர். உலக மரபுசின்னமாக ஏன் அறிவிக்க வேண்டும்?: சமணமும், சைவ, வைணவ சமயங்களை பிரதிபலிக்கும் இம்மலையின் ஒவ்வொரு பகுதியும் ஆச்சரியமும், வியப்பும் கொண்டது. இதுபோன்ற குடைவரைக் கோயிலை மகராஷ்டிரா மாநிலம் எல்லோராவில் ராஷ்ட்ரகூட மன்னன் உருவாக்கினான். இதன் நிழலாய் கழுகுமலை உள்ளதால், "தென்னகத்தின் எல்லோரா என்றழைக்கப்படுகிறது. இதை வெளிநாட்டவரும் அறிய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறது மதுரை தானம் அறக்கட்டளையின் மேம்பாட்டிற்கான சுற்றுலா அணி. இதன் திட்டத் தலைவர் பாரதி கூறியதாவது : உலக மரபுச்சின்னமாக அறிவிப்பதற்கு 10 தகுதிகள் உண்டு. அதில் ஒன்று இருந்தால்கூட போதும். ஆனால், எங்கு பார்த்தாலும் கட்டடக்கலை, ஒற்றைக்கல்லில் உருவாக்கியது, சைவ, சமண சமயங்கள் வளர்ந்த இடம் என ஐந்து தகுதிகள் கழுகுமலைக்கு உண்டு. இதை பறைசாற்றும் வகையில், உள்ளூர் மக்களை கொண்டு கிராம சுற்றுலா வளர்ச்சி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தவிர, மலையைச் சுற்றி கிரிவலம் வரவும் ஏற்பாடு செய்துள்ளோம். இதை உலக மரபுச்சின்னமாக அறிவித்தால், இன்னும் இதன் சிறப்புகளை சிறப்பாக கொண்டு செல்ல முடியும். இதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.