பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
10:06
பழநி: வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பழநியில் தேரோட்டம் நடந்தது. வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் ஏழாம் நாளான நேற்று, வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டது. மலைக்கோவில் சன்னிதி, அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு மேல் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை தேர் ஏற்றம் செய்யப்பட்டனர். தேர் புறப்படும் முன், தேரின் மீது பழங்களையும், நவதானியங்களையும் பக்தர்கள் வீசினர். விடலை தேங்காய்களை உடைத்தனர். மாலை 5.05 மணிக்கு தேரடி தேர் நிலையில் இருந்து வடம் பிடித்தல் துவங்கியது. நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது. மாலை 5.55 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் பழநி கோவில் இணை கமிஷனர் ராஜா, துணை கமிஷனர் மங்கையற்கரசி, உதவி கமிஷனர் நடராஜன், நகராட்சித் தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.