பதிவு செய்த நாள்
06
ஜன
2015
10:01
திருவாலங்காடு: திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, ஆருத்ரா அபிஷேகத்தை முன்னிட்டு, 33 வகையான அபிஷேகங்கள் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், மார்கழி திருவாதிரையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு கோவில் பிராகாரத்தில் உள்ள ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு, ஊர்த்துவ தாண்டவ உற்சவ மூர்த்தி எழுந்தருளினார். அங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், இரவு, 9:30 மணிக்கு விபூதி அபிஷேகத்துடன் திருவாதிரை அபிஷேகம் விழா துவங்கியது. மொத்தம், 33 வகையான அபிஷேகங்கள், நேற்று அதிகாலை, 4:00 மணி வரை நடத்தப்பட்டன. இரவு முழுவதும் திருமுறை விண்ணப்பம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தன.
அதிகாலை, 4:30 மணிக்கு, ஊர்த்துவ தாண்டவ பெருமானுக்கு சர்வ அலங்காரம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, ஊர்த்துவ தாண்டவர், ஆலமர பிரகாரத்தை வலம் வந்து, கோபுர தரிசனத்திற்கு வந்த பின், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று மதியம் 1:00 மணியளவில், அனுக்கிரக தரிசனம் நடந்தது. இந்த கோவிலில், கடந்த ?? ஆண்டுகளாக, ஊர்த்து தாண்டவருக்கு, தொடர்ந்து அபிஷேகம் செய்து வருகிறார், சுப்ரமணியம் குருக்கள்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: இந்த கோவிலில், சித்திரை திருவோணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, பங்குனி உத்திரம், மார்கழி திருவாதிரை என, ஆறு அபிஷேகங்கள் நடக்கின்றன. அவை அனைத்தையும், இன்று வரை நான் தான் நடத்தி வருகிறேன். மற்ற பூஜைகளை, என் மகன் சபாரத்தினம் செய்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.