பதிவு செய்த நாள்
06
ஜன
2015
10:01
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ‘ஆருத்ரா’ தரிசனத்தை யொட்டி, நேற்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. ஸ்டிபகலிங்க பூஜை முடிந்ததும், கோயில் நாயக்கர் வாசலில் இருந்து தங்க கேடயத்தில் மாணிக்கவாசகர் புறப்பாடாகி, மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தார். நடராஜர் சன்னதி முன் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடப்பட்டு, சன்னதி முன் அமைக்கப்பட்ட 7 திரையும் விலகியதும், மாணிக்கவாசகருக்கு நடராஜர் ‘ஆருத்ரா’ தரிசனத்தில் காட்சியளித்தார்.
இதைதொடர்ந்து நடராஜருக்கு பால், விபூதி, இளநீர், பஞ்சமிர்தம், தேன் உள்ளிட்ட 21 திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. நடராஜர், சிவகாமி அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், ஏராளமான பக்தர்கள், கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர். பின்னர் சுவாமி நடராஜர், சிவகாமி அம்மன் தங்க பல்லாக்கில் எழுந் தருளி, கோயில் நான்கு ரதவீதியில் வலம் வந்து, பக்தர் களுக்கு அருள்பாலித்தனர்.
* பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஜன., 27 ல் ஆருத்ரா தரிசனத்தின் துவக்கமாக மாணிக்க வாசகருக்கு காப்பு கட்டப்பட்டது. அன்று முதல் தினமும் காலை மாணிக்க வாசகர் ஆடிவீதி உலா வருதலும், மாலையில் திருவெம் பாவை வாசித்தலும், தீபாராதனையும் நடந்தது. நேற்று அதிகாலை 3 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. காலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடந்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நடராஜர் புஷ்பக விமானத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணிக்கு மகா மண்டபத்தில், விசாலாட்சி அம்பிகா சமேத சந்த்ரசேகர சுவாமி ரிஷப வாகனத்தில், பஞ்சமூர்த்திகளுடன் அருள்பாலித்தனர்.
*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எமனேஸ்வரம் எமனேஸ்வர முடையவர் கோயிலில், சிவ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில், நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.