பதிவு செய்த நாள்
06
ஜன
2015
12:01
திருத்தணி: சிவகாமி சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி, ஆருத்ரா விழாவை முன்னிட்டு, நேற்று, திருத்தணி நகரில், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அபிஷேகம்: திருத்தணி, ம.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் உள்ள சிவகாமி சமேத சுந்தரேஸ்வரர் சன்னிதியில், நேற்று முன்தினம் இரவு, ஆருத்ரா அபிஷேகம் நடந்தது. நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. தொடர்ந்து காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், உற்சவர் சிவகாமி சமேத சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் எழுந்தருளினார். அங்கு, உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10:20 மணிக்கு, உற்சவர் சுந்தரேஸ்வரர் திருத்தணி நகரில் உள்ள முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் உற்சவருக்கு கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள், துரைராஜ் செய்து இருந்தார்.