பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
11:06
அழகர்கோவில் : அழகர்கோயிலில் நிர்வாகம் சார்பில் விற்கப்படும் கோயில் பிரசாத தோசை 10 மாதங்களில் விற்பனை லாபம் ஒரு கோடி ரூபாயை தொட்டது. அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பிரசாதமாக தோசை, சம்பா சாதம், புளியோதரை, அப்பம் போன்றவை விற்கப்படுகின்றன. சோலைமலை முருகன் கோயிலிலும் இதுபோல் பல்வேறு பிரசாதங்கள் விற்கப்படுகின்றன. இதில் கோயில் தோசை மிகவும் பிரபலமானது. அழகர்கோயிலுக்கு வருபவர்கள் தோசை வாங்காமல் செல்ல மாட்டார்கள் என்ற நிலை உள்ளது. பிரசாத விற்பனைக்கு 1975 ஆண்டு முதல் டென்டர் விடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 25 சதவீதம் வரை டென்டர் தொகை உயர்த்தி விடப்பட்டது. கடைசியாக 2009ம் ஆண்டு 26 லட்சம் ரூபாய்க்கு டென்டர் விடப்பட்டது. விலை மலிவான அரிசி, தரமில்லாத எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தினர். இதனால் தோசை தரமற்று இருப்பதாக பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பிரசாத விற்பனைக்கு டெண்டர் விடுவதை கோயில் நிர்வாகத்தினர் நிறுத்தினர். கோயில் சார்பில் தோசை, பொங்கல், புளியோதரை, முருக்கு, அதிரசம், அப்பம் என பல்வேறு வகையான பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன. தோசை தரமாகவும், சுவையாகவும் இருப்பதால் 10 மாதங்களில் இதன் விற்பனை லாபம் சுமார் ஒருகோடியை தொட்டுள்ளது. இதுபற்றி கோயில் நிர்வாக அதிகாரி கல்யாணி கூறுகையில்;""கோயில் சார்பில் 2010 ஜூலை முதல் பிரசாதம் விற்பனை செய்கிறோம். சுத்தமான அரிசி, உளுந்து, மிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இரண்டு கிலோ அரிசிக்கு, ஆறு கிலோ நெய் பயன்படுத்துகிறோம். 180 கிராம் எடை உள்ள தோசை 30 ரூபாய். கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதுவரை 92 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. சோலைமலை முருகன் கோயிலில் விற்கும் பிரசாதம் மூலம் கூடுதல் லாபம் கிடைத்துள்ளது. அவர்களின் பங்காக 15 லட்சம் ரூபாயை பிரித்து தர உள்ளோம். தரம் மற்றும் சுகாதார முறைப்படி பிரசாதம் தயாரிக்க தரக் கட்டுப்பாடு அதிகாரி நியமித்துள்ளோம், என்றார்.