பதிவு செய்த நாள்
14
ஜூன்
2011
12:06
உடன்குடி : வனத்திருப்பதியில் புன்னை ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் இரண்டாவது வருஷாபிஷேக விழா, தங்க கொடிமரம் சம்ப்ரோஷணம், துலாபாரம் நிறுவும் நிகழ்ச்சி ஆகியவை வரும் 19ம் தேதி நடக்கிறது. புன்னைநகர் வனத்திருப்பதி ஸ்ரீ நிவாச பெருமாள் கோயில் ஆதிநாராயணன் - சிவணைந்த பெருமாள் கோயிலின் இரண்டாவது வருஷாபிஷேக விழா, தங்க கொடிமரம் சம்ப்ரோஷணம், வனத்திருப்பதியானுக்கு வேண்டுதலை நிறைவேற்ற துலாபாரம் நிறுவப்படும் நிகழ்ச்சி வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பல்வேறு வகையான அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு கலை நிக ழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு புதிய கருட வாகனத்தில் உற்சவர் தெரு பவனியும், வாண வேடிக்கையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை குறித்து கோயில் நிறுவனர் ராஜகோபால் கூறுகையில், கோயில் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளில் தங்க கொடிமரம் அமைப்பது தனிச்சிறப்பாகும். மேலும் 41 ஏக்கர் நிலத்தில் வனத்திருப்பதி என்ற நகர் அமைக்கப்படுகிறது. இதில் 300 பேர் அமரும் வகையிலும், 600 பேர், 1200 பேர் அமரும் இடம் வசதி கொண்ட நவீன மூன்று திருமண மண்டபமும், இரண்டாயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடும் அன்னதான மண்டபம் ஆகியவை கட்டப்படவுள்ளது. புதிய கொடிமரம் அமைக்கப்படுவதால் 10 நாட்கள் திருவிழா நடக்கும். கோயில் துவங்கப்பட்டு இது வரை சுமார் 42 லட்சம் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். வரும் ஜூன் 19ம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை நெய்பொங்கல், காலை 10 மணி முதல் 4 மணி வரை சாதம், 32 வகையான காய்கறிகள் கதம்பசாப்பாடும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை ரவா கிச்சடி, சர்க்கரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை காணவரும் பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூர், ஆறுமுகநேரி, குரும்பூர், ஆத்தூர், ஏரல், சிவத்தையாபுரம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, பூச்சிக்காடு ஆகிய ஊர்களுக்கு இலவச வேன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இன்னும் சில ஆண்டுகளில் பிரமாண்டமான வனத்திருப்பதி நாள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும் என தெரிவித்தார்.