வத்திராயிருப்பு: இறைவன் சகல ஜீவராசிகளுக்கும் உணவு வழங்கிய தினமான அஷ்டமி பிரதக்ஷண வழிபாடு வத்திராயிருப்பில் நடந்தது. இந்நாளில்தான் இறைவன் கல்லுக்குள் வாழும் தேரை முதலான முப்பத்து முக்கோடி உயிரினங்களுக்கும் உணவு வழங்கி ஆதரித்ததாக இந்து சமய புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா சிவஸ்தலங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் நேற்று இவ்விழா நடந்தது. அதிகாலையில் சுவாமிக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் பூரண கும்பம் வைத்து ஜெப வழிபாடு நடந்தது. சிறப்பு தீபாராதனைக்கு பின் பூஜிக்கப்பட்ட கும்பநீரால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிவபெருமான் அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி ஜீவராசிகளுக்கு உணவு வழங்குவதற்காக வீதியுலா சென்றார். அவர் செல்லும் வழி நெடுகிலும் இருபுறமும் அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் தூவப்பட்டது. மீண்டும் கோயிலை அடைந்து மைய மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளுடன் சிவபுராண பாராயண வழிபாடு நடந்தது. பக்தசபா நிர்வாகி சேதுசுந்தரப்பட்டர், காமேஷ்வரப்பட்டர், பக்தர்கள் ஏற்பாடு செய்தனர்.