பதிவு செய்த நாள்
14
ஜன
2015
11:01
சேலம் : சேலம் சித்தர் கோவிலில், விரைவில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சேலம் சிவதாபுரத்துக்கு அருகில் சித்தர் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில் பிரசித்தி பெற்றதாகும். சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கோவிலில் உள்ள குளத்தில் மூலிகை தண்ணீர் இருப்பதால், உடலில், "மரு உள்ளிட்ட தொந்தரவு இருப்பவர்கள் இங்கே குளித்து செல்வர்.பழமையான இந்த கோவிலை ஒட்டியுள்ள ஓடை தூர்வாரப்படாமல் இருக்கிறது. மேலும், சுற்று சுவர் இல்லாமல் தேன் கூடுகள் நிறைந்துள்ளது. சித்தர் கோவிலை சீரமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.நேற்று சேலம் ஆர்.டி.ஓ., லலிதாவதி மற்றும் வனத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள், சித்தர் கோவிலுக்கு சென்று வளர்ச்சிப்பணி மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்தனர்.துறைவாரியாக, மேற்கொள்ளப்பட வேண்டிய பணி குறித்து, ஆர்.டி.ஓ., அனைத்து துறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளார். அவர்கள் அறிக்கை சமர்ப்பித்த பிறகு, அதை கலெக்டர் மகரபூஷணத்திடம் ஒப்படைக்க உள்ளார். அதன் பிறகு, சித்தர் கோவிலில் பணிகள் துவங்கப்பட உள்ளது.