பதிவு செய்த நாள்
17
ஜன
2015
11:01
நாமக்கல்: சுவாமிக்கு வைக்கப்பட்ட பொங்கலை நாய் சாப்பிட்டதால், அதை தீட்டாகக் கருதிய கிராம மக்கள், மூன்று தலைமுறையாக பொங்கல் பண்டிகையை தவிர்த்து வந்தனர். நேற்று முன்தினம், மக்கள் ஒன்று திரண்டு பொங்கல் வைத்து, பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், சிங்கிலிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. கடந்த, மூன்று தலைமுறைக்கு முன், கிராமத்தில் பொங்கல் பண்டிகை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, சுவாமிக்கு படைப்பதற்காக பானையில் வைக்கப்பட்டிருந்த பொங்கலை நாய் சாப்பிட்டுள்ளது. அதை தீட்டாகக் கருதிய கிராம மக்கள், அந்தாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்த்தனர். அதற்கடுத்த ஆண்டு, பண்டிகை கொண்டாட முற்பட்டபோது, கிராமத்தில் சில பசு மாடுகள் அடுத்தடுத்து இறந்தன. இது, கிராம மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
வினோத பழக்கம்: அதன் காரணமாக, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை கிராம மக்கள் தவிர்க்கத் துவங்கினர். தொடர்ந்து, மூன்று தலைமுறையாக இந்த, ’வினோத’ பழக்கத்தை கிராம மக்கள் கடைபிடித்து வந்தனர். ’எதேச்சையாக நடந்த சம்பவத்தை வைத்து கிராம மக்கள் பண்டிகை கொண்டாட்டத்தை தவிர்க்கக் கூடாது. தமிழரின் அடையாளமாகக் கருதப்படும் பொங்கல் பண்டிகையை, கிராம மக்கள் கொண்டாட வேண்டும்’ என, அக்கிராமத்தைச் சேர்ந்த, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளங்கோ வலியுறுத்தி வந்தார். மக்களின் மூடநம்பிக்கையை முறியடிக்கும் வகையில், இளங்கோ, தொடர்ந்து கிராமத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் வழக்கத்தை, கடந்த, 13 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, சிங்கிலிப்பட்டி மாரியம்மன் கோவில் முன், ஆறு குடும்பத்தினர் தனியாகவும், ஊர் பொதுமக்கள் சார்பில் ஒன்றும் என, ஏழு பொங்கல் வைக்கப்பட்டது.
பிரசாதம்: அப்போது, ஊர் மக்கள் திரண்டு வந்திருந்து, விழாவில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. இனி ஆண்டு தோறும் ஊர் மக்கள் சார்பில், பொங்கல் விழா உற்சாகமாகக் கொண்டாடப்படும் என, அவர்கள் தெரிவித்தனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளங்கோ கூறுகையில், ”பொங்கல் கொண்டாடுவது, மூன்று தலைமுறையாக நிறுத்தப்பட்டிருந்தது. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி, தற்போது, ஊர் பொதுமக்கள் சார்பில் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து பொங்கல் விழா கொண்டாடப்படும்,” என்றார்.