பதிவு செய்த நாள்
17
ஜன
2015
11:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கார் பார்க், அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்த 14 கண்காணிப்பு கேமராக்களும் பழுதாகி விட்டதால், பக்தர்களிடம் தொடர் திருட்டு நடந்து வருகிறது. அவற்றை தடுக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் 300க்கு அதிகமான வேன், கார்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை கோயிலுக்கு சொந்தமான ‘கார் பார்க்’கில் நிறுத்துகின்றனர். பாது காப்பு கட்டணமாக காருக்கு ரூ. 10, வேனுக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. போலீசார் உத்தரவால், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ‘கார் பார்க்’கில் 12 கண்காணிப்பு கேமராக்களை கோயில் நிர்வாகம் பொருத்தியது. இங்கு 4 செக்யூரிட்டிகள் பணியில் இருந்தும், மர்ம நபர்கள் கார்களின் கண்ணாடி களை உடைத்து செல்போன், பணம், நகைகளை திருடுவது தொடர் கதையாக உள்ளது. இதே போல் அக்னி தீர்த்த கடற்கரையில் சுற்றித்திரியும் திருடர்கள், கடலில் நீராடும் பக்தர் களின் கைப்பைகளை திருடுவதும் தொடர்கிறது. இதனால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், பக்தர்கள் பரிதவிக்கின்றனர். தொடர் திருட்டை தடுக்க, ஓராண்டுக்கு முன்பு அக்னி தீர்த்த கரையில் 2 கண் காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தி இருந்தனர். ஆரம்பத்தில் பம்பரமாக சூழன்ற
கேமராக்கள், நாளடைவில் பராமரிப்பின்றி பழுதாகி விட்டதால் திருடர்களின் பிடியில் அக்னி தீர்த்த கரை சிக்கி விட்டது.திருடர்கள், அனைத்து கேமராக்களிலும் பதிவு ஆகாமல் சாமர்த்தியமாக தப்புவது, போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அக்னி தீர்த்த கரையில் முடங்கிய கேமராவை செயல்படுத்தி, கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும். ‘கார் பார்க்’கில் இன்னும் அதிக கேமராக்களை பொருத்தி, வீடியோ மானிட்டரை கண்காணிக்க தனி ஊழியரை நியமித்து, கோயில் செக்யூரிட்டி காவலர்களுடன், தமிழ்நாடு சிறப்பு படை போலீசாரையும் ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் இதற்கு எஸ்.பி. மயில்வாகனன் உத்தரவிட வேண்டும். இதையும் மீறி திருடு போகும் பொருட்களுக்கு, பணியில் உள்ள செக்யூரிட்டிகள், கோயில் ஊழியர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.