பதிவு செய்த நாள்
17
ஜன
2015
02:01
திருப்பூர்: தை பொங்கல் விழாவையொட்டி, திருப்பூர் குமாரனந்தபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் உடனமர் ராமலிங்கேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில், நவராத்திரி விழாவும், தை பொங்கல் பண்டிகையும், விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, திருப்பூர் குமரானந்தபுரம் மற்றும் ஓலப்பாளையம் பகுதிகளில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில், தை பொங்கல் விழா, கடந்த 14ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்றிரவு 7:30க்கு, சக்தி அழைக்கும் நிகழ்ச்சி; 15ம் தேதி காலை, வீரமக்களின் அலகு சேவை, பம்பை வாத்தியத்துடன் திருமஞ்சனம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று மதியம், அம்மனுக்கு அபிஷேக பூஜை, உச்சிகால பூஜை, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, அம்மனுக்கு கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. "வா, தாயே! வா, தாயே... மக்களையெல்லாம் காப்பாற்று! என உரக்கச் சொல்லியபடி, பக்தர்கள் கத்தி போட்டனர். ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.