பதிவு செய்த நாள்
19
ஜன
2015
12:01
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான, கருடசேவை நேற்று நடந்தது. உற்சவர் கருட வாகனத்தில் எழுந்தருளி
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவம், கடந்த, 16ம் தேதி துவங்கியது. தினமும், காலை, மாலை உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று நடந்தது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்தனர். 5:00 மணிக்கு வீரராகவ பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
பின், மண்டபத்திற்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மாலை, ஹனுமந்த வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். இன்று, காலை, சேஷ வாகனமும், மாலை, சந்திரபிரபையும் நடக்கிறது. நாளை, காலை 4:00 மணிக்கு நாச்சியார் திருக்கோலமும், தொடர்ந்து ரத்னாங்கி சேவையும் நடக்கிறது.
மற்றொரு முக்கிய நிகழ்வான, தேரோட்டம், 22ம் தேதி, காலை 7:30 மணிக்கு நடக்கிறது.