பதிவு செய்த நாள்
19
ஜன
2015
12:01
பொள்ளாச்சி : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கொடியேற்றத்திற்காக வனப்பகுதியிலிருந்து கொடிமரம் வெட்டி கொண்டு வரப்பட்டது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக வனப்பகுதியிலிருந்து மூங்கில் கொடிமரம் வெட்டி எடுத்து பக்தர்கள் தோளில் வைத்து சுமந்து வருவது வழக்கம். இந்தாண்டும் வனப்பகுதியிலிருந்து கொடிமரம் எடுத்து வர நேற்று காலை 8:30 மணிக்கு பக்தர்கள், மாசாணியம்மன் கோவிலிருந்து புறப்பட்டனர். வனப்பகுதியிலிருந்து 81 அடி உயர கொடிமரம் வெட்டியெடுத்து கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து, அங்குள்ள மாரியம்மன் கோவிலில், வைத்து 81 அடி மூங்கிலுக்கு விபூதி, குங்குமம், பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. பின், மூங்கிலை சுற்றி மஞ்சள் புடவை கட்டப்பட்டது. 81 அடி உயரம் உள்ள மூங்கிலுக்கு சிறப்பு பூஜை செய்து, நேற்று மாலை 5:30 மணிக்கு பக்தர்கள் தங்களுடைய தோளில் சுமந்து மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அதன் பின், நேற்று ஆனைமலை உப்பாற்றில் தண்ணீரில் வைத்து மூங்கிலில் உள்ள வளைவுகள் சரி செய்யப்பட்டு, நாளை (20ம் தேதி) மாசாணியம்மன் கோவில் ராஜ கோபுரத்துக்கு முன் கொடிக்கட்டப்படும்.
கொடிமரம் கொண்டு வரும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கார்த்திக், மாசாணியம்மன் நற்பணிமன்றத்தினர், கோவில் முறைதாரர்கள் மனோகரன், கிருஷ்ணன் மற்றும் கோவில் பூசாரிகள், அருளாளிகள் அருண், முத்துச்சாமி, பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார் ஆகியோர் செய்திருந்தனர்.