மதுரை: சூரியனுக்கு அருகில் செல்வது என்றால் அறிவிற்கு அருகில் செல்வது என பொருள், என சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா குறிப்பிட்டார்.மதுரை எஸ்.எஸ்.காலனி தாம்பிராஸ் மண்டபத்தில் மகாபாரதம் தலைப்பில் அவர் பேசியதாவது:அந்தணர் ஒருவருக்கு உதவ பாண்டவர்கள் முயன்றனர். அவர்களுக்கு தாகம் ஏற்பட்டது. அருகில் உள்ள தடாகத்திற்கு நகுலன் சென்றான்.
தடாகத்திற்கு உரிமை கொண்டாடும் யட்சன் ஒருவன், என் கேள்விக்கு பதிலளித்த பின் தண்ணீர் எடுக்கலாம், என்றான். அதை அலட்சியம் செய்த நகுலன், அந்த நீரை அருந்த அது விஷநீராக மாறி நகுலன் இறந்தான். அடுத்தடுத்து சகாதேவன், அர்ச்சுனன், பீமன் நீரை அருந்தி இறந்தனர். இறுதியாக தர்மர் சென்றார். அங்கு வந்த யட்சன், சூரியனை முதலில் உதிக்க செய்பவர் யார்? சூரியனின் அருகாமையில் செல்லக்கூடியவர் யார்? சூரியனை அஸ்தமிக்கசெய்பவர் யார்? சூரியன் எதில் நிலை பெற்றிருக்கிறான்?, என கேட்டான்.
சூரியனை உதிக்கச் செய்பவர் பிரம்மா. பிரம்மா என்ற சொல்லிற்கு வேதங்கள் என்ற ஒரு பொருள் உண்டு. சூரியன் உதிப்பதற்கு வேதங்களே காரணம். சூரியனை உதயத்தில் வழிபட்டால் ரிக் வேத்தின் அருளும், மதியம் வழிபட்டால் யஜூர் வேத்தின் அருளும், மாலையில் வழிபட்டால் சாம வேத்தின் அருளும் கிடைக்கும். சூரியனுக்கு அருகில் செல்வது என்றால் அறிவிற்கு அருகில் செல்வது என பொருள், என தர்மர் பதிலளித்தார் என்றார். இந்நிகழ்ச்சி ஜன., 20 வரை மாலை 6.45 மணிக்கு நடக்கிறது.