பதிவு செய்த நாள்
21
ஜன
2015
10:01
ஆனைமலை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆண்டுதோறும், குண்டம் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முன்னதாக, சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட, 81 அடி உயரம் உள்ள கொடிமரம், ஆனைமலை உப்பாற்று நீரில் ஸ்நானம் செய்து புனிதப்படுத்தப்பட்டது. கொடிமர பூஜைக்குப் பின், பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக கொடி மரத்தை சுமந்து, கோவிலுக்கு கொண்டு வந்தனர். காலை, 8:40 மணிக்கு, கோவில் முன் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மா மாசாணி தாயே என்று உணர்ச்சி பொங்க சரண கோஷம் எழுப்பினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, பிப்., 2ம் தேதி, நள்ளிரவு, 1:00 மணிக்கு, மயான பூஜை, 4ம் தேதி இரவு, 10:30 மணிக்கு, குண்டம் பூ வளர்த்தலும், 5ம் தேதி காலை, 8:30 மணிக்கு, குண்டம் இறங்குதலும் நடக்கிறது.