பதிவு செய்த நாள்
22
ஜன
2015
12:01
சென்னிமலை : சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், தைப்பூசத் தேர் திருவிழா, வரும், 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஃபிப்., 3ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது. கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த ஸ்தலமான இங்கு, பழனி முருகன் கோவிலைப்போல, பங்குனி உத்திர தேர்திருவிழா விமரிசையாக, 15 நாட்கள் கொண்டாடப்படும். வரும், 25ம் தேதி காலை கணபதி ஹோமமும், 26ம் தேதி காலை, 7 மணிக்கு கொடியேற்றமும், இரவில் பல்லக்கு சேவையும் நடக்கிறது.தொடர்ந்து தினமும், இரவு, 8 மணிக்கு பல்வேறு வாகனங்களில், முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். இதன்படி, 27ம் தேதி பல்லாக்கு சேவை, 28ம் தேதி மயில் வாகனக்காட்சி, 30ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும், வெள்ளிமயில் வாகனக்காட்சி, 31ம் தேதி யானை வாகனத்தில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா நடக்கிறது.ஃபிப்., 1ம் தேதி கைலயங்கிரி, காமதேனு வாகனக்காட்சி, 2ம் தேதி இரவு, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், எட்டு மணிக்கு வசந்த திருக்கல்யாணமும் நடக்கிறது. 3ம் தேதி அதிகாலை, 3 மணிக்கு மகா அபிஷேகமும், காலை, 7 மணிக்குள் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
தேரோட்டத்தில், அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், வனத்துறை அமைச்சர் ஆனந்தன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.,க்கள் காங்கேயம் நடராஜ், மொடக்குறிச்சி கிட்டுசாமி, ஈரோடு ராமலிங்கம், எம்.பி.,கள் திருப்பூர் சத்தியபாமா, ஈரோடு செல்வகுமார சின்னையன், கலெக்டர் பிரபாகர் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.பின், 4ம் தேதி மாலை, 5 மணிக்கு தேர் நிலை வந்தடையும். 5ம் தேதி இரவு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சி, 6ம் தேதி இரவு தெப்போற்சவம், பூத வாகன காட்சியும், 7ம் தேதி இரவு, மகாதரிசனத்தில் நடராஜ பெருமான், வெள்ளி விமானத்திலும், சுப்பிரமணிய ஸ்வாமி வள்ளி, தெய்வானை உடன் எழுந்தருளி வெள்ளி மயில் வாகனத்திலும், திருவீதி உலா நடக்கிறது.அன்று, சென்னிமலையில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுவர். 8ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் பெருவிழா நிறைவடைகிறது.ஏற்பாடுகளை தக்கார் சபர்மதி, கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், அலுவலர்கள், அர்ச்சகர்கள் செய்கின்றனர்.
திருவிழாவில், ஃபிப்., 2ம் தேதி இரவு ஸ்ரீராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், சின்னதிரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி, 3ம் தேதி இரவு, 9 மணிக்கு கொங்கு வேளாளர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி, 4ம் தேதி இரவு நாதஸ்வர, தவில் இசை கச்சேரி, 5ம் தேதி இரவு பட்டி மன்றம், 6ம் தேதி இரவு வானவேடிக்கை, இரவு, 9 மணிக்கு செங்குந்தர் கைக்கோள முதலியார் இளைஞர் அணி சார்பில், கிராமய கலை நிகழ்ச்சி, 7ம் தேதி இரவு பக்தி இன்னிசை நிகழ்ச்சி, இரவு, 9.30 மணிக்கு செங்குந்த கைக்கோள முதலியார் அறக்கட்டளை சார்பில் நாதஸ்வர தவிலிசை கச்சேரி, 8ம் தேதி இரவு, 9 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.