பதிவு செய்த நாள்
16
ஜூன்
2011
11:06
திருச்சி : ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் விரிசல், கோபுர உச்சி நகர்வு, கோபுரம் புதைவு போன்ற பிரச்னைகளை ஆய்வு செய்ய, ஜூலை மாத இறுதியில் நாக்பூரில் இருந்து ஒரு ஆய்வுக்குழு, திருச்சி வருகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில், 236 அடி உயரத்தில், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரம் என்ற பெருமையை பெற்ற ராஜகோபுரம் உள்ளது. மொட்டை கோபுரமாக நின்ற நிலையில், கடந்த 1979ம் ஆண்டு, அகோபில மடம், 44வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகளால், ஸ்ரீரங்கம் சிவப்பிரகாச ஸ்தபதியால், ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கியது. 1987ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி, ராஜகோபுரத்துக்கு குடமுழுக்கு நடந்தது. கட்டுமானப் பணி துவங்கியது முதல், முடிந்த பின்பு வரை, பல்வேறு பிரச்னைகளை ராஜகோபுரம் சந்தித்தது. அதை எதிர்கொள்ள, 1986ம் ஆண்டு முதல், கடந்த 1996ம் ஆண்டு வரை, மூன்று தொழில்நுட்ப நிபுணர் குழுக்கள், ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை பல்வேறு நவீன முறைகளில் பரிசோதனை செய்தனர்.
அதில், கோபுர உச்சி 0.6 முதல் 7.1 அங்குலம் வரை நகர்ந்துள்ளது. கோபுரத்தில் ஒரு மில்லி மீட்டர் முதல் 3 மில்லி மீட்டர் வரை வெடிப்பு விட்டுள்ளதாகவும், 18 செ.மீ., ஆழத்துக்கு கோபுரம் புதைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக வந்த குழு, ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட 10 தொழில்நுட்ப பரிந்துரைகளை அளித்தனர். இன்று வரை ஒரு பரிந்துரை கூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ராஜகோபுர கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விரிசல்களில் கண்ணாடித் துண்டுகள் ஒட்டப்பட்டது. விரிசல் அதிகமானதால், கண்ணாடி துண்டுகள் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தன. கடந்தாண்டு செப்டம்பரில், போட்டோவுடன் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அச்சமயத்தில் காளஹஸ்தி கோபுரம் இடிந்து விழுந்ததால், ஸ்ரீரங்கம் ராஜகோபுர விரிசல் குறித்தும், உலகம் முழுவதும் உள்ள பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை முழுமையாக ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய, நாக்பூரில் இருந்து தொழில்நுட்பக்குழு, ஜூலை மாத இறுதியில் வர இருக்கிறது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ""ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை ஆய்வு செய்ய, நாக்பூர் ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் அடங்கிய தொழில்நுட்பக்குழு, ஜூலை மாத இறுதியில் வர இருக்கின்றனர். கோபுரத்தில் உள்ள விரிசல், கோபுர உச்சி, கோபுர புதைவு போன்றவற்றை முழுமையாக ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்கின்றனர். அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், ராஜகோபுரம் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும், என்றார்.