பதிவு செய்த நாள்
30
ஜன
2015
04:01
பொதுவாக, இறைவனின் திருமேனியில் சார்த்த விரும்பி, ரெண்டு முழம் பூவையோ அல்லது ஒரு பூமாலையையோ வாங்கிச் செல்கிறீர்கள்.... நேராகப் போய் அதை அர்ச்சககரிடம் தருகிறீர்கள். அவர் என்ன செய்வார்? நீங்கள் தந்த பூவையோ, மாலையையோ இறைவனின் திருமேனிக்குச் சார்த்திவிட்டு, மந்திரங்கள் சொல்லி, ஒரு கற்பூர ஆரத்தி காட்டுவார். இதுதானே வழக்கம்? ஆனால் பூலோக வைகுந்தமான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் வித்தியாசமான ஒரு நடைமுறை சுமார் 150 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது. ஸ்ரீரங்கநாதர் கருவறையில் பிரமாண்டமாகக் காட்சி தரும் ஸ்ரீரங்கநாதருக்கும் தனிச் சன்னிதித் தாயாரான ஸ்ரீரங்க நாச்சியருக்கும் புஷ்பங்கள் எதையும் சார்த்த மாட்டார்கள். அதே சமயம் ஸ்ரீரங்கநாதரின் திருமேனிக்குக் கீழே தாயார்களுடன் உத்ஸவர்களாகத் தரிசனம் தரும் நம்பெருமாள் (அழகிய மணவாளன்) மற்றும் தாயார் சன்னிதியில் தரிசனம் தரும் ஸ்ரீரங்க நாச்சியார் ஆகியோருக்குக் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் புத்தம் புது மாலைகளை அணிவிப்பார்கள்.
ஸ்ரீரங்கத்தில் அம்மா மண்டபத்துக்கு அருகே பிரமாண்டமாக அமைந்துள்ள மதுரகவி திருநந்தவனத்தில் இருந்து தொடுத்து வரும் பூமாலைகள் மட்டுமே இந்த உத்ஸவர் விக்கிரகங்களுக்குத் தினமும் சார்த்தப்படும். இங்கிருந்து செல்லும் மாலைகள்தான் பெருமாளையும் பிராட்டியையும். பஞ்ச ஆயுத புருஷர்களுள் ஒருவரான ஸ்ரீசுதர்சன ஆழ்வாரையும் அலங்கரிக்கின்றன. (வருடா வருடம் கோடை காலத்தின் போது நடக்கும் பூச்சாற்று உத்ஸவத்தின்போது மட்டும் பக்தர்கள் தரும் மலர்மாலைகள் பெருமாளையும் தாயாரையும் அலங்கரிக்கும்). மற்ற பக்தர்களோ, அதிகாரிகளோ, முக்கிய பிரமுகர்களோ மாலைகளைக் கொண்டு கோயில் அர்ச்சகர்களிடம் சேர்ப்பித்தால். அவை இந்த உத்ஸவ விக்கிரகங்களின் திருமேனிக்குப் போகாது. திருவடியில்தான் சார்த்தப்படும். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
ஆம்! இந்த நந்தவனத்தில் மலருகின்ற பூக்கள் அனைத்தும் ஸ்ரீரங்கம் அரங்கனுக்கே உரியவை. இந்த பூக்களை வெளியே விலைக்கு விற்கக் கூடாது. ஸ்ரீரங்கம் விழாக் காலங்களில் பயன்படுத்துவதற்கு, இந்தப் பூக்கள் போதவில்லை என்றால் வெளியில் இருந்து வாங்கிக்கொள்ளலாம். மலர்மாலைகள் கட்டுவதற்குப் பயன்படுத்தியது போக, எஞ்சி இருக்கும் பூக்களை காவிரி ஆற்றில் கொட்டி விடவேண்டும் என்று மதுரகவி நந்தவனத்து ஆவணம் சொல்கிறது. ஆழ்வார்களின் சேவைக்கு இணையாக இந்தத் தொண்டு இன்று வரை மதிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் பெருமாளுக்குப் பூக்கட்டும் இந்தப் பணிக்கு பிரம்மச்சாரிகள் மட்டுமே ஈடுபடுத்தப்படுவர் இது ஒரு சேவை. அதனால், இவர்களுக்கு சம்பளம் கிடையாது. தினமும் இரண்டு வேளை சாப்பாடு இவர்களுக்கு உண்டு. தவிர டிபன், காபி, டீ போன்ற எதையும் சாப்பிடக்கூடாது. இன்றைய தினம் வரை இறைவனின் சேவையாக சில பிரம்மச்சாரிகள் இதைத் தொடர்ந்து செய்து வருவது பாராட்ட வேண்டிய விஷயம்.
ஸ்ரீரங்கம் கோயில் இருக்கும் அதிகாரிகளும் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர்களும் இந்த சேவையின் மதிப்பையும் அந்தஸ்தையும் உணர்ந்து மதுரகவி நந்தவன அன்பர்களைப் போற்றி வருகிறார்கள். இப்படி உயர்ந்த ஒரு சேவை ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் இன்றைக்கும் நடந்து வருகிறதென்றால், அதற்குக் காரணமாக இருப்பவர் மதுரகவி சுவாமிகள் என்பவர். வாழ்நாள் முழுதும் பிரம்மச்சாரியாகவே இருந்து ஸ்ரீரங்கநாதருக்கு மாலைகளைத் தயார்செய்தல், ஸ்ரீரங்கம் தங்க விமானத்தைப் புதுப்பித்தல் என்று ஸ்ரீரங்கம் சம்பந்தப்பட்ட பணிகளையும், இன்ன பிற ஆன்மிகப் பணிகளையும் ஆற்றித் தன் வாழ்நாளைச் செலவழித்தார். இந்த மகானின் திருவரக (திருச்சமாதி) நந்தவனத்துக்கு எதிரிலேயே அமைந்துள்ளது. மலர்மாலைகளைத் தயார் செய்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அனுப்பும் இந்தக் கைங்கர்யப் பணி எப்படி மதுரகவி சுவாமிகளுக்கு வந்தது?
சுவாமிகளின் அவதாரத்தில் இருந்தே வருவோம். 1846-ஆம் வருடம் தைப்பூரத்தன்று ஸ்ரீரங்கம் வீரேஸ்வரத்தில் அரங்கப் பிள்ளை- ரங்கநாயகி அம்மாள் தம்பதிக்குப் புதல்வனாக அவதரித்தார் சுவாமிகள். வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பம் என்பதாலும். ஸ்ரீரங்கம் அருகே அவதரித்தாலும், திருவரங்கத்தில் உறையும் ஸ்ரீரங்கநாதர் மீது அளவில்லா பிரியம் கொண்டிருந்தார். மதுரகவி சுவாமிகள். சுமார் ஒன்பது வயதான காலத்திலேயே, இந்த பக்தி அவருக்குள் ஊற்றெடுக்க ஆரம்பித்தது. தெருவில் ஸ்ரீரங்கநாதர் உலா வந்தால் போதும்.... அதில் இரண்டறக் கலந்து விடுவார் மதுரகவி. ஊர்வலத்தின் பின்னாலேயே பெருமாளுக்குத் துணையாக உடன் செல்வார். அவ்வப்போது பெருமாளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பார். ஸ்ரீரங்கனின் கம்பீரமான அழகும் கண்களைக் கூசச் செய்யும் நவரத்தின ஆபரணங்களும், திருமேனியில் நறுமணம் வீசும் மலர் மாலைகளும் சிறுவனான மதுரகவியை ரொம்பவும் பரவசப்படுத்தின. கிட்டத்தட்ட பெருமாளுடன் பேசவும் கூடிய ஒரு பாக்கியத்தைப் பெற்றார் மதுரகவி. தலையில் துலங்கும் கம்பீரமான மகுடத்திலும் முன் நெற்றியில் பளிச்சிடும் கறுமையான கஸ்தூரிப் பொட்டும். அபயம் அருளும் வலது திருக்கரமும் கதையைத் தாங்கிப் பிடித்திருக்கும் இடது திருக்கரமும் கொண்டு அந்த மாலவன் ஸ்ரீரங்க வீதிகளில் வலம் வரும்போது பித்துப் பிடித்தாற்போல் அவனைப் பின்தொடர்ந்தே செல்வார் மதுரகவி.
அது ஒரு வைகுண்ட ஏகாதசி காலம், கோயிலில் இருந்து புறப்பட்ட உத்ஸவர், வீதி உலா வரும்போது தன் தாயார் ரங்கநாயகியின் கைப்பிடித்து, ஸ்ரீரங்கத்தின் மன்னரான அந்தப் பெருமாளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் மதுரகவி. பெருமாளிடம் இருந்து நகர மனம் இல்லாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். டேய்ய்.... வாடா.... கோயிலுக்குப் போய் முத்தங்கி சேவையில் பெருமாளை சேவிக்க வேண்டும். கூட்டம் நெக்கித் தள்ளிவிடும். வரிசையில் இடம் பிடிக்க வேண்டும். சீக்கிரம் வா என்று மகனின் கையைப் பற்றி இழுத்தார் ரங்கநாயகி. மதுரகவியின் கையைப் பற்றிக்கொண்டு கிட்டத்தட்டட சாலைகளில் பெருமாளின் உலாவுக்குப் பின்னே ஓட ஆரம்பித்தார் ரங்கநாயகி. முத்தங்கி சேவை முக்கியம் ஆயிற்றே! அது என்னவோ, தெரியிவில்லை... பெருமாள் கடந்து வந்த வெற்றுத் திருவீதிகளையே ஏக்கத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தார் மதுரகவி. என்ன தேடுகிறார் மதுரகவி? வெற்றுச் சாலைகளில் என்ன பொக்கிஷம் இருக்கும்? திடீரென மதுரகவியின் முகத்தில் கோடி சூரிய பிரகாசம். வெடுக்கென்று அன்னையின் கைப்பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். நடந்து வந்த பாதையில் திரும்பி ஓடினார். சாலையில் கிடக்கும் அந்த ஒற்றை இருவாட்சிப் பூங்கொத்தைச் சட்டென்று குனிந்து எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார். தலைமேல் வைத்துக்கொண்டார். ஆனந்தக் கூத்தாடினார். இது நடந்த வருடம் 1855.
பெருமாளுக்கு அணிவிக்கப்படும் மாலைகளின் மேல் மதுரகவிக்கு ஈடுபாடு வந்த இன்னொரு கதை... அன்றைய தினம் உத்ஸவர் புறப்பாட்டுக்காகப் பெருமாள் வெளியே மணல்வெளியில் அமர்ந்து அலங்காரம் தரித்துக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீரங்கன் உறையும் கருவறைக்குச் சென்றார் மதுரகவி. கருவறையில் அன்று கூட்டமே இல்லை. ஒரே ஒரு அர்ச்சகர் மட்டும் சன்னிதியில் இருந்து வருகின்ற பக்தர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தார். ஓட்டமாக ஓடி வந்த மதுரகவி, அங்கே மூலவர் திருமேனியின் முன் நின்றார். அர்ச்சகர் பார்த்தார். அடேய் பையா.... நம்பெருமாளின் ஆபரண அழகையும் அவனுடைய புன்னகை சொரூபத்தையும். மணம் வீசும் திருமாலைகளின் திவ்ய திருக்கோலத்தையும் காண பக்தர்கள் மணல்வெளியில் திரளாகக் குவிந்திருக்கும்போது, நீ மட்டும் இங்கே ஏன் வந்தாய்? என்றார் அர்ச்சகர். ஸ்வாமி..... எனக்குப் பிரசாதம் வேண்டும்...... மதுரகவி. கல்கண்டு முந்திரியும்தானே... தாராளமாகத் தருகிறேன் கண்ணா என்று வெள்ளிக் கிண்ணத்தில் இருந்து அவற்றை எடுத்து மதுரகவிக்கு அர்ச்சகர் தர முற்படும்போது. அவன் முகத்தில் மலர்ச்சி இல்லை. அர்ச்சகர் வியந்தார். ஏனடா.... கல்கண்டும் முந்திரியும் உனக்குத் திருப்தி இல்லையோ? என்று கேட்டார். ஆம் என்பது போல் தலையை மேலும் கீழும் ஆட்டினார் மதுரகவி.
வேறென்ன வேண்டும்?- குழம்பிய நிலையில் கேட்டார் அர்ச்சகர். அதோ.... அதுதான் எனக்கு வேண்டும் - மதுரகவியின் விரல்கள் நீண்ட பக்கம், ஒரு மூலையில் நம்பெருமாளின் நிர்மால்யம் கிடந்தது. இவன் ஸ்ரீரங்கத்தானின் தீவிர பக்தன் போலும் என்பதைப் புரிந்துகொண்ட அர்ச்சகர். ஓ.... உனக்குப் பெருமாளின் பழைய மாலை வேண்டுமா? தந்தேன் என்றபடி வண்ண மலர்கள் கோத்துக் கட்டி இருந்த அந்த வாடிய மாலையை மதுரகவியிடம் எடுத்துத் தந்தார் அர்ச்சகர். தன் இரு கரங்களால், அதைப் பெறும்போது மதுரகவியின் முகத்தில் தென்பட்ட பரவசம் இருக்கிறதே... கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும், அந்த சந்தோஷம் இருக்காது. அப்படி ஒரு சிலிர்ப்பு, பரவசம், அந்த மாலையைத் தன் கைகளில் வைத்து அழகு பார்த்தார். கழுத்தில் போட்டுக்கொண்டு கர்வப்பட்டார். பிறகு, ஸ்வாமி... ஒரு கேள்வி கேட்கலாமா? என்றார் மதுரகவி.
கேள் மகனே.... கேள். இந்தச் சிறு வயதிலேயே இறையருள் பெற வேண்டும் என்று விரும்புகிறாயே.... உனக்கு இறை இன்பம் வழங்குவதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. பெருமாள் அணியும் இந்த மாலைகளை எல்லாம் தொடுத்துத் தருவது யார்?- மதுரகவி. இதோ.... இங்கிருந்து ஓரிரு காத தூரம் நடந்தாயானால். காவிரி வரும். அதன் கரையை ஒட்டி. வேங்கடாசல ராமானுஜதாஸர் திருநந்தவனம் இருக்கும். அங்கு வசித்து வரும் திருநந்தவனக் குடிகள் என்று அழைக்கப்படுகிற ஏகாங்கிகள்தான் இத்தகைய மாலைகளைத் தினமும் தொடுத்து, பெரும் சேவையாகப் பெருமாளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏகாங்கி என்பவர் யார்? - மதுரகவி தன் சந்தேகத்தைக் கேட்டார்.
உன் அப்பனைப் போலும். என்னைப் போலும் அல்லாதவரே ஏகாங்கி அதாவது, கட்டை பிரம்மச்சாரி. திருமணம் கூடாது. சிந்தையை ஸ்ரீரங்கத்தானிடம் மட்டுமே வைக்கவேண்டும். தினமும் நந்தவனத்தில் பூப்பறிப்பது. பின் அதை மாலையாகத் தொடுப்பது. அவற்றைச் சேகரித்துக் கொண்டு இந்த கோயிலில் சேர்ப்பது - இவையே ஏகாங்கிகளின் வேலை. இறைவனின் அடியவர்கள் அவர்கள். - அர்ச்சகர் அவனுக்குப் புரிய வைத்தார். ஸ்வாமி..... நானும் ஏகாங்கி ஆக முடியுமா? - ஏக்கத்தோடு கேட்ட மதுரகவியை. இனம் புரியாமல் பார்த்து, நீயெல்லாம் இல்லறத்தில் வாழப் பிறந்தவன். உன் அப்பா-அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால். ஏதோ நான்தான் உன் மனதைக் கெடுத்துவிட்டதாகச் சொல்லிவிடுவார்கள். உடனே இங்கிருந்து புறப்படப்பா என்று மதுரகவியை விரட்டாத குறையாக அனுப்பி வைத்தார்.
பெருமாளுக்குப் பூக்கட்டும் பாக்கியமும் மதுரகவி சுவாமிகளுக்கு ஒரு தினம் வந்தது.
ஸ்ரீரங்கம் கோயிலில் பந்தம் பிடிப்போர். கட்டியம் கூறுவோர் போன்றோர் இருந்தனர். இவர்களை சாத்தாத வைணவர்கள் என்று அழைப்பர். அதாவது, உடலில் பூணூல் சாத்தி இருக்க மாட்டார்கள். இவர்கள் வசித்து வந்த வீதி சாத்தாத (சாத்தார) வீதி என்றே அழைக்கப்பட்டு வந்தது. பெருமாளுக்குப் பூமாலைகள் அனுப்பும் உரிமம். துவக்கத்தில் இவர்களிடம்தான் இருந்து வந்தது. பூச்சந்தை வைத்து இந்தத் தர்மப் பணிகளைச் செய்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் நொடித்துப் போக.... இந்தக் கைங்கர்யம் நின்று போய்விடுவதாக இருந்தது. அந்த வேளையில்தான், மதுரகவி சுவாமிகள் ஐயாயிரம் ரூபாயைக் கொடுத்து, அவர்களிடம் இருந்து இந்த உரிமையை எழுதி வாங்கிக் கொண்டார்.
அதன் பின், மதுரகவி சுவாமிகளின் முழு உழைப்பால் உருவானதே இந்த நந்தவனம். மதுரகவி சுவாமிகளுக்குப் பதினேழு வயது இருக்கும்போது அவரது பெற்றோர். சுவாமிகளுக்குப் பெண் பார்க்கத் தொடங்கினர். தனக்குத் திருமணம் வேண்டாம் என்றும், பெருமாள் சேவையில் என்றென்றும் தான் திளைத்திருக்கப் போவதாகவும் சொல்லி, தன் திருமணத்துக்கு என்று பெற்றோர் சேர்த்து வைத்திருக்கும் தொகையான இருநூறு ரூபாயைப் பெற்றுக்கொண்டார். இந்தத் தொகைக்கு பத்து பவுனில் கடலைக்காய் மணி வாங்கித் தாயாருக்கு சார்த்தி அழகு பார்த்தார் மதுரகவி. பெற்றோரிடம் இருந்து தனக்கு வரவேண்டிய சொத்து கைக்கு வந்ததும். இந்த நந்தவனத்தில் விதம் விதமான பூச்செடிகளை வளர்த்தார். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு உண்டான கைங்கர்யம் தடை இல்லாமல் நடைபெறத் துவங்கியது.
ஸ்ரீவானமாமலை ஜீயரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டார். ஸ்ரீபிள்ளை லோகாச்சார்யா சன்னிதி சாமி ஐயங்காரிடம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற வைணவ நூல்களைக் கற்றறிந்தார். நந்தவனத்தை மேலும் விஸ்தரிக்கும்பொருட்டு சீனிவாச ராமானுஜதாசர். வேங்கடாஜல ராமானுஜதாசர் போன்ற அன்பர்களின் உதவியுடன் திருச்சி, சென்னை போன்ற நகரங்களுக்குச் சென்று பஷ்ப கைங்கர்யத்துக்கு மாத சந்தாவாக ஒரு தொகை வசூலித்தார். பெருமாள் அபிமானிகள் மற்றும் சில அன்பர்களின் உதவியோடு சோழமாதேவி கிராமத்தில் சில நிலங்களை வாங்கினார். நந்தவனத்தை அடுத்து சில தோட்டங்களையும் வாங்கி, புஷ்ப கைங்கர்யத்தை விரிவுபடுத்தினார். ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு அருகில் காணப்படும் இந்தத் திருநந்தவனமும் சுவாமிகளின் திருவரசும் தரிசிக்க வேண்டியவை.
மலர்த் தோட்டங்களுக்குள் செருப்பணிந்து செல்லக் கூடாது. மலர்களுக்கு விடுவதற்கென்றே இருக்கும். நீரில் வாய் கொப்பளிக்கக் கூடாது- இப்படிச் சில நிபந்தனைகளை இன்றளவும் காத்து வருகிறார்கள். மஞ்சள். சிவப்பு, வெள்ளை, பச்சை என அனைத்து நிறங்களிலும் இங்கே மலர்கள் மலர்கின்றன. துளசி, விருட்சி, சம்பங்கி, மாசிப்பச்சை, நந்தியாவட்டை, துளசி, பட்டு ரோஜா, மனோரஞ்சிதம், மகிழம்பூ குருக்கத்தி, பாதிரி என்று எண்ணற்ற பூ வகைகள். பட்டு ரோஜாவின் முள் அதிகம் இருக்காது. பெருமாளுக்கு சிரமம் இருக்கக் கூடாது. என்பதற்காக இந்தப் பட்டு ரோஜாவைப் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள்.
தினமும் அதிகாலை வேளையில் சுமார் பத்து பிரம்மச்சாரிகள் மாலை கட்டும் இந்த மண்டபத்துக்கு வந்துவிடுகிறார்கள். அவர்களில் சிலர் பூக்குடலை எடுத்துச் சென்று பூப்பறித்து வருகிறார்கள். மளமளவெனப் பணிகள் முடிந்த பின் அரங்கனின சன்னிதிக்கு அவை செல்கின்றன. தினமும் சுமார் பதினாறு மாலைகள். இரு வேளைகளில் - அதாவது மொத்தம் முப்பத்திரண்டு மாலைகள் ஸ்ரீரங்கம் செல்கின்றன. இதெல்லாம் சாதாரண நாட்களில். விசேஷ நாட்களில். மதுரகவி நந்தவனத்தின் பங்கு ரொம்ப அதிகம். சித்திரை, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் நடக்கும் திருவிழாக் காலங்களில் (மொத்தம் 44 நட்கள்) அலங்காரமான மாலைகள் செல்லும். தெப்ப உத்ஸவத்தின்போது திருநந்தவனக் குடிகள் தயாரிக்கும் தெப்ப மாலைகள், பிரமாண்டமானவை; பெருமளவில் பேசப்படுவை. தவிர ஆழ்வாராதிகளின் திருநட்சத்திரத்தன்றும் விசேஷ மாலைகள் செல்லும்.
மதுரகவி சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவையும் ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்து வருகிறது. பெருமாளுக்கு மதிய பிரசாதமாக (பெரிய வசரம் என்பர்) வெள்ளைச் சாதம், ரசம், கீரை, ஊறுகாய் போன்றவை நிவேதனம் செய்யப்படும். இதில் ஊறுகாய்க்காக பெருமாளுக்குத் தினமும் பத்து எலுமிச்சம்பழங்களும் தாயாருக்கு ஐந்து எலுமிச்சம் பழங்களும் நந்தவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சேவைகள் மட்டுமல்ல.... ஜீரணமாகிப் போயிருந்த தன் தங்கக் கூரையையும் புதுப்பிக்க ஸ்ரீரங்கம் பெருமாள், மதுரகவியைத்தான் தேர்ந்தெடுத்தார். 1891-ல் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்த அர்ச்சகர்கள், சுவாமி...... ஸ்ரீரங்கநாதனுடைய விமானங்களிலும் பத்மத்திலும் போட்டிருந்த பொன் தகடுகள் மிகவும் ஜீரணம் ஆகிவிட்டன. தாங்கள்தான் முயற்சி எடுத்து, இதைப் புதுப்பித்துத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். முதலில் பயந்து போன சுவாமிகள். அதற்கெல்லாம் நான் ஆளில்லை. எனக்கு புஷ்ப கைங்கர்யம் மட்டும்தான் தெரியும். இதற்கெல்லாம் பணம் வசூல் பண்ண வேண்டும். அவ்வளவு பெரிய தொகை எல்லாம் என்னை நம்பி யார் கொடுப்பார்கள்? என்னால் ஆகாது என்று மறுத்துவிட்டார் மதுரகவி.
விடுவாரா அரங்கன்? அன்றிரவே மதுரகவியின் கனவில் தோன்றி ஏன் உன்னால் முடியாதா? கையில் காசு இல்லை என்றால், திருப்பணி செய்ய மறுத்துவிடுவாயோ? நீதான் ஆரம்பிக்க வேண்டும் இது என் பணி. என் பெயரால் பணியைத் துவங்கு தானாக முடியும் என்று சொல்லி, தன் திருக்கரத்தை மதுரகவியின் சிரசில் வைத்து ஆசி வழங்கி மறைந்தார். மறுநாள் தன் குருநாதரான குவளைக்குடி சிங்கம் ஐயங்காரைச் சந்தித்து விமானத் திருப்பணியையும், அரங்கன் கனவில் வந்த விஷயம் பற்றியும் சொன்னார். பெருமாளின் திருவுளப்படியே திருப்பணியைத் துவங்கு இதோ, முதல் உபயம் நான்தான் என்று சொல்லி, ஒரு பித்தளைக் குடத்தில் பத்து ரூபாயைப் போட்டுக் கொடுத்தார். ஐந்தே வருடங்களில் தேசம் முழுக்க அலைந்து எண்பதாயிரம் ரூபாய் திரட்டி, விமானத் திருப்பணிகள் நடந்து. 1903-ல் மிகப் பெரிய குடமுழுக்கும் நடந்தேறியது. அந்தக் காலத்தில் எண்பதாயிரம் ரூபாய் என்பது சாதாரணம் அல்ல என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
இதற்கு அடுத்த ஆண்டு (1904) குரோதி வருடம் ஐப்பசி மாதம் நம்பெருமாள் ஊஞ்சல் உத்ஸவத்தின் ஏழாம் நாள்.... நந்தவன கோஷ்டிகளுக்குப் பிரசாதம் விநியோகிக்கப்பட்டன. மதுரகவி சுவாமிகளும் அதை ஏற்றுக்கொண்டார். அன்றைய தினம் இரவு சுமார் பதினொரு மணிக்கு ஆச்சார்யனின் திருவடியை அடைந்தார்.
மதுரகவி சுவாமிகளின் திருச்சன்னிதிக்கு மதுரை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் உட்பட எண்ணற்ற ஆன்மிக அன்பர்களும் பின்னர் வந்த காலத்தில் திருப்பணிகள் செய்துள்ளார்கள். காவிரிக் கரையை ஒட்டிக் காணப்படும். இந்த நந்தவனமும் திருவரசும் பக்தர்கள் அனைவரும் சென்று வணங்க வேண்டிய ஒன்று. ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள் சன்னதிக்கு அருகில் மதுரகவி சுவாமிகளைப் பற்றிய வரலாறு. ஒரு கல்வெட்டாக - அவரது சேவையின் சாட்சியாக இன்றைக்கும் இருக்கிறது.
மதுரகவி நந்தவன டிரஸ்ட் அன்பர்கள் நம்மிடம் சொன்னார்கள். மதுரகவி சுவாமிகள் சொல்லி இருந்தபடி அவரின் திருநந்தவனத்தையும் புஷ்ப கைங்கர்யப் பணிகளையும் இன்று வரை திறம்படச் செய்து வருகிறோம். பெருமாளின் திருவருளாலும், சுவாமிகளின் குருவருளாலும் நந்தவனப்பணிகள் இன்றைக்கும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கின்றன. இதைவிட வேறு என்ன பெருமை எங்களுக்கு?
உயர்ந்த சேவையை நடத்தி வரும் இந்த அன்பர்களை வாழ்த்துவதில் பெருமை கொள்வோம்!
தகவல் பலகை
தலம் : ஸ்ரீரங்கம்.
சிறப்பு : மதுரகவி சுவாமிகள் திருவரசு. திருநந்தவனம்.
எங்கே இருக்கிறது?: திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் இருக்கிறது. மதுரகவி சுவாமி திருவரசு மற்றும் திருநந்தவனம். திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ.! சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது?: திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் மார்க்கமாகச் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் மாம்பழச் சாலை வழியாகச் செல்லும். இங்கே இறங்கிக்கொண்டால், அரை கி.மீ. தொலைவு நடை, ஆட்டோ வசதி உண்டு. ஸ்ரீரங்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் இந்த நந்தவனம் வழியாகச் செல்லும்.
தொடர்புக்கு: ஸ்ரீமான் மதுரகவி சுவாமிகள் நந்தவன டிரஸ்டி,
ஸ்ரீமான் மதுரகவி சுவாமிகள்,
நந்தவன பிரஸிடென்ட்,
போன்: 0431-2432328,
நன்றி: திருவடி சரணம்