மதுரையில் தெப்பத்திருவிழா: வடம் பிடித்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2015 10:02
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்ப உற்சவத்தை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளினர். தண்ணீரில் இறங்கி சப்பரத்தை பக்தர்கள் வடம் பிடித்தனர்.
தெப்ப உற்சவம் ஜன.,23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா நேற்று துவங்கியது. நேற்று காலை, சுவாமி பிரியாவிடையுடன் வெள்ளி வாகனத்திலும், அம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி அம்மன் சன்னதி, சித்திரை வீதிகளில் வலம் வந்தனர்.அங்கிருந்து முனிச்சாலை, காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர். மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி, அம்மன் நேற்று காலை எழுந்தருளினர். சப்பரத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மைய மண்டபத்தை இரண்டு முறை வலம் வந்தது. பின், மீண்டும் முக்தீஸ்வரர் கோயிலில் சேர்த்தியானது.
மாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 8.30 மணிக்கு சுவாமி, அம்மன் மீண்டும் ஒருமுறை மைய மண்டபத்தை சப்பரத்தில் வலம் வந்தனர். தெப்பக்குளம், மைய மண்டபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.வான வேடிக்கை நடந்தது. அங்கிருந்து புறப்பட்டு நேற்றிரவு கோயிலில் சேர்த்தியானது. இதை முன்னிட்டு நேற்று கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன், கண்காணிப்பாளர் கணேசன், பொறியாளர் குமரன் ஏற்பாடுகளை செய்தனர்.