பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூசத் தேரோட்டம் நடந்தது. பழநி தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை, விநாயகர், அஸ்திர தேவருடன் சண்முக நதி தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார்.
கலசங்கள் வைத்து யாகபூஜை நடந்தது. காலை 11:30 மணிக்கு முத்துகுமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருத்தேரேற்றம் செய்யப்பட்டனர். முருகனுக்கு அரோகரா கோஷங்களுடன் மாலை 4:45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. மாலை 5:50 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தைப்பூச விழாவில் இன்று இரவு 8 மணிக்கு முத்துகுமாரசுவாமி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளல், வையாபுரிகுளக் கரையில் வாணவேடிக்கை நடக்கிறது.