காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மூன்றாம் நாள் தெப்போற்சவம், நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவில் தெப்போற்சவம், ஆண்டு தோறும் தைப்பூசத்தில் நடப்பது வழக்கம். அதன்படி சனிக்கிழமை துவங்கி நேற்று முன்தினம்
மூன்றாவது நாள் நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி அம்பாளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு, சன்னிதி தெருவில் உள்ள அரசு காத்தம்மன் கோவில் வரை சென்று, இரவு 8:20 மணியளவில் கோவில் குளத்திற்குவந்தடைந்தார். இருவரும் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, குளத்தை ஏழு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த விழாவில் கலந்து கொண்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.