பதிவு செய்த நாள்
05
பிப்
2015
12:02
காஞ்சிபுரம்: தைப்பூச திருநாளான நேற்று முன்தினம் நள்ளிரவு, பெருநகர் செய்யாற்றில்,
18 கோவில்களின் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காஞ்சிபுரம் அடுத்த, பெருநகர் பகுதியில் செய்யாறு உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று, சுற்றியுள்ள கோவில்களில் இருந்து உற்சவர்கள் எழுந்தருள்வர். காலங்காலமாக நடந்து வரும் இந்த திரு விழாவில், சில கிராம கோவில்களில், திருவிழா நடத்துவதற்கு கூட வசதி இல்லாமல் இருந்தாலும், தொடர்ந்து திருவிழாவில் கலந்து கொண்டு பாரம்பரியத்தை காத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு, நேற்று முன்தினம் தைப்பூசத்தன்று, நள்ளிரவு முதல், ஒவ்வொரு சுவாமியும் தத்தம் கோவில்களில் இருந்து புறப்பட்டனர். பெருநகர் அருகே செய்யாறு பகுதிக்கு, அதிகாலை 3:00 மணி முதல், சுவாமிகள் வர துவங்கினர். ஊர்வலமாக செய்யாற்றில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் திரண்டு, சுவாமிகளை வரவேற்று, தேங்காய் உடைத்து வழிபட்டனர். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செய்யாற்றில் இருந்து,சுவாமிகள், அதிகாலை 5:30 மணியளவில் தங்கள் கோவில்களுக்கு புறப்பட்டு சென்றனர்.