பதிவு செய்த நாள்
05
பிப்
2015
12:02
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், இன்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி
நடைபெறுகிறது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 20ம் தேதி,
கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று மாலை, 6:30 மணிக்கு, சித்திரத்தேர் வடம் பிடித்தல், அம்மன் தேர் வீதி உலா வந்தது. நேற்று இரவு, 10:00 மணிக்கு தேர் குண்டம் மைதானத்துக்கு வந்தது. அங்கு, விடிய விடிய, குண்டத்தில் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று அதிகாலை அம்மன் அருளாளிகள், முறைதாரர்கள், கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்டவர்களால் ஆனைமலை உப்பாற்றங்கரைக்கு சென்று, சிறப்பு பூஜை செய்து, பேழைப்பெட்டி எடுத்து வரப்படுகின்றது.
இன்று காலை 8:30 மணிக்கு, குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தலைமை முறைதாரர்
மனோகரன் முதலில் குண்டம் இறங்கியதும், அருளாளிகள் இறங்குவர். தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். இதற்கென, மயான பிடிமண்ணை கொண்டு, 52 அடி நீளத்தில், 11 அடி அகலத்தில் குண்டம் கட்டப்பட்டுள்ளது. நான்கு பகுதிகளிலும் அம்மனின் சிங்க வாகனம் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. மருத்துவக்குழுவினரும், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
வால்பாறை டி.எஸ்.பி. சக்திவேல் தலைமையில், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 300 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவில் உதவி ஆணையர் கார்த்திக் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். குண்டம் திருவிழாவுக்காக, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.