பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
10:06
காரைக்கால் : திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், 65 லட்சம் ரூபாய் செலவில் தங்க ரிஷப வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் திருநள்ளாரில், பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, உலகின் பல்வேறு பகுதியிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கிலும், வார சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கிலும் பக்தர்கள் வருகின்றனர். கோவிலில் பஞ்ச மூர்த்தி ரிஷப வாகன வீதி உலாவிற்காக, கடந்த ஆண்டு 40 லட்சம் ரூபாய் செலவில் தங்க ரிஷப வாகனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக நன்கொடை வசூலிக்கும் பணி நடந்தது. கடந்த ஆண்டு திருநள்ளார் கோவிலுக்கு வந்த கர்நாடக முதல்வர் எடியுரப்பாவிடம், காரைக்கால் மாவட்ட பா.ஜ.,வினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், கோவிலில் தங்க ரிஷப வாகனம் தயாரிக்க முடிவு செய்துள்ளதைத் தெரிவித்தனர். உடனடியாக, தங்க ரிஷப வாகனம் செய்ய 40 லட்சம் ரூபாயை கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்தார். இந்த பணத்தைக் கொண்டு தங்க ரிஷப வாகனம் தயாரிக்கும் பணி துவங்கியது. ரிஷப வாகனத்தில், 2 கிலோ தங்கமும், 25 கிலோ வெள்ளி மூலம் பீடம் அமைத்தல் பணி நடந்து வந்தது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்ததால், 40 லட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்ட ரிஷப வாகனம், 65 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துவிட்டது. ரிஷப வாகனத்திற்கு தேவையான மீதி பணம் கோவில் நிதியைக் கொண்டு தயார் செய்ய முடிவு செய்து பணிகள் நடந்தது. கடந்த 8ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பணி முடியாததால் சாதாரண ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. தற்போது, தங்க ரிஷப வாகனம் தயாரிக்கும் பணி முடிந்துவிட்டது. முழுவதுமாக செய்து முடிக்கப்பட்ட தங்க ரிஷப வாகனம், கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பூஜைகள் செய்து பயன்படுத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர்.