பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
10:06
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பாதுகாப்பு மற்றும் சென்று திரும்பும் வழிகள் குறித்து, நேற்று மத்திய அதி விரைவுபடை வீரர்கள் ஆய்வு செய்தனர். மும்பை தாஜ் ஓட்டல் தாக்குதலுக்கு பின், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள கோயில்கள் உட்பட முக்கிய இடங்களை பாதுகாக்க மத்திய ரிசர்வ் படையின் கீழ், அதிவிரைவுப்படையை (ரேப்பிட் ஆக்ஷன் போர்ஸ்) மத்திய அரசு அமைத்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவிற்கென 10 பட்டாலியன் படை வீரர்களை கொண்ட மையம் கோவையில் அமைக்கப்பட்டது. இவர்கள் பயங்கரவாத தடுப்பு குறித்து மூன்று மாத பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை துணை கமாண்டன்ட் பிகான்சர்மா தலைமையில், உதவி கமாண்டர்கள் கீதாம்மா, மாதவன் மற்றும் வீரர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தனர். கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள், சென்று வரும் வழிகள் குறித்து போலீஸ் உதவிகமிஷனர் தனபால், இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி அவர்களிடம் விளக்கினர். இதைதொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் பயங்கரவாத தடுப்பு பயிற்சியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர். பின், விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன், திருப்பரங்குன்றம், அழகர்கோவிலில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.