பதிவு செய்த நாள்
20
ஜூன்
2011
10:06
பகல்காம் : காஷ்மீர் மாநிலத்தில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில், 18 அடி உயர பனி லிங்கம் உருவாகியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் தெற்குப் பகுதியில், இமயமலையில் அமர்நாத் குகைக் கோவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 856 அடி உயரத்தில் உள்ள இந்த குகைக் கோவிலில், ஆண்டுதோறும் இயற்கையாக பனி லிங்கம் உருவாகிறது. இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், நாடு முழுவதிலுமிருந்தும் யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டு, பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அமர்நாத் குகைக் கோவிலில் இந்த ஆண்டு 18 அடி உயரத்தில் இயற்கை பனிலிங்கம் உருவாகியுள்ளது. இதை தரிசிப்பற்கான யாத்திரை விரைவில் தொடங்க உள்ளது. அமர்நாத் குகைக் கோவிலுக்கு காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பகல்காம் வழியாகவும், மத்திய காஷ்மீரில் உள்ள பால்தால் வழியாகவும் செல்லலாம். பக்தர்கள் எளிதாக யாத்திரை மேற்கொள்வதற்கு வசதியாக, இந்த இருவழிகளையும் சீர்படுத்தும் பணிகளை அம்மாநில அரசு செய்து வருகிறது. மேலும், பக்தர்களின் பாதுகாப்புக்காக, மாநில போலீசாரும், 50 கம்பெனி துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.