சூலுார் : இருகூர் மற்றும் முத்துக்கவுண்டன்புதுார் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலுார் அடுத்த இருகூர் வெள்ளேரி அங்காளம்மன் கோவில் பழமையானது. இங்கு சிவராத்திரியை ஒட்டி நடக்கும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றது. நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு குண்டம் இறங்குதல் நடந்தது.அலகு குத்திய பக்தர்கள் பலர் குண்டம் இறங்கினர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. முக்குந்தர் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் பத்மசுந்தரி தலைமை வகித்தார்.முத்துக்கவுண்டன்புதுார் அங்காளம்மன் கோவிலிலும் குண்டம் திருவிழா நடந்தது. அறுபது அடி குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கினர். அபிஷேக அலங்கார பூஜையை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.அரசூர் பரமசிவன் கோவிலில் நடந்த சிவராத்திரி பூஜையில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலுார் மேற்கு அங்காளம்மன் கோவிலில் காலை, 9:00 மணிக்கு அலகு நிறுத்தும் விழா நடந்தது.