பதிவு செய்த நாள்
04
மார்
2015
01:03
ஆலங்குடி : புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த குளமங்கலத்தில் உள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் திருவிழா, இன்று நடைபெற உள்ளது.
குளமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில், ஆண்டு தோறும் மாசி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு, மாசிமக திருவிழா நடக்கும். அய்யனார் கோவில் என்ற போதிலும், கிடா வெட்டு போன்ற பூஜை முறைகள் இல்லை.இக் கோவிலில் ஸ்வாமிக்கு செய்வது போல், 31 அடி உயரமுள்ள குதிரை வாகனத்துக்கும் பக்தர்கள், ஆயிரக்கணக்கான மாலை அணிவித்து வழிபாடு செய்கின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வாகனங்களில், மாலைகள் கொண்டு வந்து மாலை அணிவித்து, வணங்கி செல்கின்றனர்.கடந்த ஆண்டு, கோவில் திருவிழாவின் போது, 750க்கும் அதிகமான மாலைகள் அணிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு, 1,000க்கும் மேற்பட்ட மாலைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.