பதிவு செய்த நாள்
05
மார்
2015
12:03
மேட்டுப்பாளையம் : கொட்டும் மழையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேர்த்திருவிழா, கடந்த மாதம், 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவிசமேதராக அரங்கநாதப் பெருமாள், அலங்காரம் செய்திருந்த திருத்தேருக்கு எழுந்தருளினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமியை வழிபட்டனர். மாலை, 4:30 மணிக்கு தேர் முன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின், ஸ்தலத்தார், பட்டர், ஊர் கவுடர், மிராசுதார்கள் முன்னிலையில், பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோட்டம் துவங்கியதும், அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான தாசர்கள் சங்கு ஊதி, சேகண்டி அடித்தனர். பக்தர்களின், ரங்கா பராக், கோவிந்தா பராக் கோஷம் முழங்க, தேர் பவனி வந்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் தேர் இழுத்தனர். வழியெங்கும் திரண்டிருந்த பக்தர்கள், அரங்கநாதரை தரிசித்து அருள் பெற்றனர். தேர் செல்லும் போது, பக்தர்கள் வாழைப்பழங்களை தேர் மீது வீசி, நேர்த்திக் கடன் செலுத்தினர்.