பதிவு செய்த நாள்
05
மார்
2015
12:03
கும்மிடிப்பூண்டி: சுண்ணாம்புக்குளம் காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், மாசி மகத்தை முன்னிட்டு நடைபெற்ற கடலாடு உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்பு குளம் கிராமத்தில், ஞானபிரசுனாம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. மாசி மாதம், மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று கடலாடு உற்சவம் நடைபெற்றது. நேற்று, காலை 10:00 மணியளவில், கோவிலின் பின்புறம் உள்ள கடலோரத்திற்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில் சந்திரசேகரராக அம்பாளுடன் சுவாமி சென்றார். கடலாடு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்ற பின், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்து, கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பின், அம்பாளுடன் சுவாமி வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விமரிசையாக நடைபெற்ற கடலாடு உற்சவத்தை காண, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.