பதிவு செய்த நாள்
10
மார்
2015
10:03
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ரூ.ஒரு கோடி செலவில் புதிய கருங்கல் மண்டபம் அமைக்க, பெங்களூருவில் இருந்து கருங்கல் தூண்கள் வந்துள்ளன. ராமேஸ்வரம் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த ரூ. 7 கோடி செலவில் கிழக்கு ராஜகோபுரம், மூன்றாம் பிரகாரம், சுவாமி, அம்மன் சன்னதிகளில் மராமத்து, பெயிண்ட் பூசுதல், சுவாமி, அம்மன், பஞ்சமூர்த்திகள் விமானங்கள் புதுப்பிப்பு போன்ற பணிகள் நடக்கிறது. கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள, நூறு ஆண்டு பழமையான ஓட்டு கொட்டகையை அகற்றி விட்டு, ரூ. 1 கோடி செலவில் கருங்கல்லில் முகப்பு மண்டபம் அமைக்க, பெங்களூரு சிருங்கேரி மடம் சுவாமிகள் முன்வந்துள்ளார். அதன்படி, பெங்களூருவில் வடிவமைக்கப்பட்ட கருங்கல் தூண்கள், நேற்று கோயிலுக்கு வந்தது. இன்னும் சில தினங்களில், இத்தூண்களில் சிற்ப கலை பணிகள் முடிந்ததும் அம்மன் சன்னதியில் முகப்பு மண்டபம் அமைக்கும் பணி துவங்கும் என, கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.