பதிவு செய்த நாள்
23
ஜூன்
2011
10:06
கோட்டயம்: கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மேல்சாந்தி குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது அங்கு தந்திரியாக, தாழமண் குடும்பத்தைச் சேர்ந்த கண்டரரு ராஜீவரருவும், மேல்சாந்தியாக சசி நம்பூதிரியும் உள்ளனர். மேல்சாந்தியை நியமிப்பதில் தங்களுக்கே உரிமை வேண்டும் என, தாழமண் குடும்பத்தினரும், பந்தள ராஜகுடும்பத்தினரும் கோரி வருகின்றனர். இதுகுறித்து, பந்தள ராஜகுடும்பத்தைச் சேர்ந்த ஆர்.ஆர்.வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் ஜெ.எஸ்.மிஸ்ரா, இப்பிரச்னை குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, நீதிபதி கே.டி.தாமஸ் என்பவரை நியமித்து உத்தரவிட்டனர். நீதிபதி தாமஸ் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார். அவர் இதுவரை, எட்டு முறை விசாரணை நடத்தி உள்ளார். விசாரணை முடிந்து நீதிபதியின் அறிக்கை, விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் நகல்கள், திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, தாழமண் குடும்பம் மற்றும் பந்தள ராஜ குடும்பம் ஆகியோருக்கும் வழங்கப்படும். அவ்வறிக்கையின் மீது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கும்.