பதிவு செய்த நாள்
13
மார்
2015
10:03
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீது, ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் இணையதள முன்பதிவை, தேவஸ்தானம் துவக்கியது. வரைவோலை, போஸ்டல் ஆர்டர், காசோலை மூலம், ஆர்ஜித சேவா டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையை ரத்து செய்து, இணையதளம் மூலம், முன்பதிவு செய்யும் முறையை துவக்கியது. இதனால், ‘கிரெடிட், டெபிட் கார்டு’ வைத்திருப்பவர்; இணையதளம் நன்கு அறிந்தவர் மட்டும், டிக்கெட் முன்பதிவு செய்யும் நிலை ஏற்பட்டதால், படிக்காத மக்கள், டிக்கெட் எடுக்க சிரமப்படுகின்றனர். இதை எதிர்த்து, ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த சங்கர்ராவ், கடந்த டிச., 1ம் தேதி, ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில், ‘தேவஸ்தானம், டிக்கெட் முன்பதிவில், பழைய முறையை பின்பற்ற வேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி ராஜசேகர் ரெட்டி, ‘தேவஸ்தானம், இதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு, வழக்கை வரும், 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.