பதிவு செய்த நாள்
16
மார்
2015
03:03
காமதம் என்ற வனப் பகுதியில் அத்திரி முனிவரும், அவரது மனைவி அனுசூயாவும் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்தனர். பல முனிவர்களும் அங்கிருந்தனர். ஐந்தாண்டுகள் மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டது. அங்கிருந்த முனிவர்கள் வேறு இடங்களுக்கு புறப்பட்டனர். ஆனால், அனுசூயா இதை பொருட்படுத்தாமல், கணவருக்கு பணிவிடை செய்து வந்தாள். அவள் முன் தோன்றிய கங்காதேவி,அம்மா அனுசூயா! மற்றவர்கள் வறட்சிக்கு பயந்து கிளம்பிய நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் கணவனுக்கு சேவை செய்தது கண்ட சிவன், என்னை அனுப்பினார். வேண்டும் வரம் கேள், என்றாள்.தாயே! வறண்ட வனத்தை வளமாக்கு, என்றாள்.அப்படியே ஆகட்டும் என்ற கங்கை, அனுசூயாவிடம், எல்லோரும் என்னில் நீராடுவதால், அவர்கள் செய்த பாவமெல்லாம் எனக்குள் கரைந்து கிடக்கிறது. உன் போன்ற பதிவிரதை மனம் வைத்தால் நான் சுத்தமாகி விடுவேன், என்றாள். சற்று கூட தயக்கமின்றி, அனுசூயா கணவருக்கு சேவை செய்த புண்ணியத்தை தர சம்மதித்தாள். அப்போது சிவன் தேவியோடு காட்சி தந்து, புண்ணியத்தையே தானம் செய்த புண்ணியவதி நீயம்மா என வாழ்த்தினார். அங்கு நீர் வளம் பெருகியது.