பதிவு செய்த நாள்
19
மார்
2015
11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலுக்காக, தங்கத்தேருக்கான மரத்தேர் பணி முழுமை பெற்றுள்ளது. வருகிற 22ல் மரத்தேர் வெள்ளோட்டம் விடப்படுகிறது. பிரசித்து பெற்று விளங்கும் சைவ தலங்களில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இங்கு, உற்சவ மூர்த்திகள் வலம் வருவதற்கு பல்வேறு வாகனங்கள் உள்ள நிலையில், தங்கத்தேர் இல்லாத நிலை இருந்து வந்தது. இதையடுத்து, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில் தங்கத்தேர் செய்யும் பணி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது. முதற்கட்டமாக, மரத்தேர் பணி நிறைவடைந்துள்ளது. வரும் 22ம் தேதி, இந்த தேர் வெள்ளோட்டம் விடப்படுகிறது. தொடர்ந்து, மரத்தேரில் செப்புத்தகடு பதிக்கப்பட்டு, தங்க முலாம் பூசப்படும். இந்த பணிகள் இன்னும் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். அடுத்த ஆண்டு பங்குனி உற்சவத்தின்போது, ஏலவார் குழலியுடன் ஏகாம்பரநாதர், தங்கத் தேரில் எழுந்தருளி பவனி வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.