பதிவு செய்த நாள்
20
மார்
2015
12:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள, பழமையான சுவர் ஓவியங்களை, பழமை மாறாமல் புதுப்பிக்க, 67.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பெற்று விளங்கும் வைணவ தலங்களில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலும் ஒன்று. கோவில் பணி, முதன் முதலில் கி.பி., 848ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு சன்னிதிகள் படிப்படியாக கட்டி முடிக்கப்பட்டு, கடைசியில் கிருஷ்ண தேவராயர் காலத்தில் பணி நிறைவடைந்தது. இங்கு, 400 ஆண்டுகளுக்கு முன், இயற்கை மூலிகைகள் கொண்டு தீட்டப்பட்ட, சுவர் ஓவியங்கள் உள்ளன. கொடி மரம், தொண்டரடி வாசல் அருகின் இருபுறமும் உள்ள சுவரில் கிருஷ்ணன் லீலை, ஆறு பெண்களை யானை போல் சித்தரிக்கும் விசித்திர ஓவியம்; திருமலை பிரகாரம் சுற்றிலும் தசாவதாரம், 108 திவ்ய தேசங்கள், பெருமாள் – தாயார் படங்கள் அனைத்தும் இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட வண்ணங்களை கொண்டு தத்ரூபமாக தீட்டப்பட்டு, பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி வந்தன. இந்த ஓவியங்களில் பெரும் பாலானவை, பக்தர்களின் ‘சேஷ்டை’ காரணமாக, சீரழிந்து வருகின்றன. ஆண்டாள் நீராட்டு மண்டபம் மேல் பகுதியில் வரையப்பட்டிருந்த மூலிகை ஓவியங்கள், காலப்போக்கில் கண்ணுக்கே புலப்படாமல் மறைந்து, சிதைந்து விட்டன. இந்த ஓவியங்களை புதுப்பித்து பாதுகாக்க, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மூலிகை ஓவியங்களை புதுப்பிக்க, தற்போது, 67.10 லட்சம் நிதியை அரசு ஒதுக்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறுகையில், “இந்த கோவிலில் உள்ள பழைய சுவர் ஓவியங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க, கடந்த மாதம் இந்து சமய அறநிலையத் துறை, நிதி ஒதுக்கி அறிவித்துள்ளது. ஓவியம் வரைவதற்கு டெண்டர் கோரப்பட்டு, அதன்பின் பணி துவங்கும்,” என்றார்.